நன்னிலத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி
நன்னிலத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று மாலை மிதமான பெய்த மழை, இரவு கனமழையாக மாறி தற்போது (இன்று ஜன.8)வரை தொடர்கிறது.
தொடர் கனமழை காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 22 செ.மீ மழை திருவாரூரிலும், 16 செ.மீ மழை நன்னிலத்திலும், 13 செ.மீ மழை குடவசாலிலும் பெய்துள்ளது.
இதனிடையே நன்னிலம் அருகே உள்ள அதம்பார் ஊராட்சி, ஒத்த வீடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் ராஜசேகரின் மகள் மோனிஷா (9), மகன் மோகன்தாஸ் (12) காயமடைந்தனர். பலத்த காயமடைந்த மோனிஷா சம்பவ இடத்திலேயே பலியானார். சிறுவன் மோகன்தாஸ் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நன்னிலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தொடர் கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.