வலைதளத்தில் மாலத்தீவை நீக்கு! கோபத்தில் இந்திய பயனாளர்கள்!
சுற்றுலா பயண திட்டங்களுக்கு உதவும் இணைய நிறுவனமான மேக் மை ட்ரிப் (MakeMyTrip), பிரதமர் மோடியின் பதிவால் தங்கள் வலைதளத்தில் லட்சத்தீவினைத் தேடுவது 3400% அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விவரங்களைப் பதிவிட்ட அந்நிறுவனம், இந்திய கடற்கரைப் பகுதிகளுக்கு பயணங்களை ஊக்குவிக்கும் இணையவழிப் பிரசாரங்களை முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும், மேக் மை டிரிப்பின் இந்த பதிவில் கமெண்ட் செய்துள்ள பல பயனாளர்கள், மாலத்தீவுக்கு செல்ல உங்கள் நிறுவனம் அளிக்கும் அனைத்து சேவைகளையும் உடனே நிறுத்த வேண்டும் எனப் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், ‘மாலத்தீவை உங்கள் வலைதளத்தில் சேவைக்குள்ளான பகுதிகளிலிருந்து நீக்கவில்லை எனில், நான் ‘ஈஸ்மை ட்ரிப்’ (EaseMyTrip) நிறுவன சேவைக்கு மாறிவிடுவேன்’, என மிரட்டியுமுள்ளனர்.
மேக் மை ட்ரிப்பின் போட்டியாளரான ஈஸ் மை ட்ரிப் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரசாந்த் பிட்டி, மாலத்தீவுக்கான அனைத்து சேவைகளையும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி லட்சத்தீவு சென்று வந்தது தொடர்பாக மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறு கருத்துக்களை பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது அந்த அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.