இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தலைவர் பதவிக்குப் போட்டியா? வேண்டாம் என்கிறார் சம்பந்தன் – சிறிதரனிடம் அவரே நேரில் கூறினார்.
“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டி இல்லாத தலைவர் தெரிவும், சகல உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்த மாநாடும் நடைபெற வேண்டும். கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சி எவ்வாறு பலமாக இருந்ததோ அதே போன்ற நிலைமை தொடர வேண்டும். நாம் தொடர்ந்தும் பலத்துடன் இருக்க வேண்டும். கட்சிக்குள் போட்டிகள் வந்தால் அது கட்சியையும், உறுப்பினர்களையும் பலவீனப்படுத்தும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். இதன்போதே சம்பந்தன் எம்.பி. தம்மிடம் மேற்கண்டவாறு கூறினார் என்று சிறிதரன் எம்.பி. தகவல் வெளியிட்டார்.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு மற்றும் தேசிய மாநாடு தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்குக் கொழும்பில் உள்ள சம்பந்தன் எம்.பியின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பதாக நேற்று முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் சிறிதரன் எம்.பியை நேரில் சந்தித்துக் கட்சியின் ஒற்றுமைப் பயணம் தொடர்பில் பெருந்தலைவர் சம்பந்தன் எம்.பி. பேசினார்.
“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியின் தேசிய மாநாடு சிறப்பாக நடக்க வேண்டும். இந்நிலையில், புதிய தலைவர் தெரிவு போட்டி இல்லாமல் நடைபெறும் நிலைமையை ஏற்படுத்த முடியாதா?” – என்று இதன்போது சிறிதரனிடம் சம்பந்தன் வினவினார்.
“நாளை (இன்று) உங்கள் வீட்டில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நடைபெறும்தானே ஐயா. அதில் இது தொடர்பில் தீர்மானம் எடுப்போம்” – என்று சிறிதரன் பதிலளித்தார்.