திருப்பதி அளவிற்கு சபரிமலையில் அலைமோதிய கூட்டம்.. 15 மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், 15 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடத்த 27ஆம் தேதி மண்டல பூஜை முடிந்து நடை சாத்தப்பட்ட நிலையில் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 31ஆம் தேதி நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல், பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் சுமார் 12 முதல் 15 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் 18ஆம் படியேறி, ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.
எனினும், ஒரு சில பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாமல் அடிவாரத்தில் உள்ள பம்பையிலே தங்களது விரதத்தை முடித்து வீடுகளுக்கு திரும்புவதாக வேதனை தெரிவிக்கின்றனர். வரலாறு காணாத பக்தர்கள் கூட்டத்தால் எரிமேலி , நிலக்கல் பம்பை போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.