மக்கள் நிதியில் அரச கப்பலில் மஹிந்த நடுக்கடலில் ‘பார்ட்டி’ – சபையில் சஜித் போட்டுடைப்பு.

பொருள்களின் விலை தாறுமாறாக அதிகரித்து மக்கள் திண்டாடும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர்களும் மக்கள் பணத்தில் கப்பல்களில் நடுக்கடலுக்குச் சென்று விருந்துபசாரம் நடத்துகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (11) கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

“ஜனவரி மாதம் பாடசாலை மாணவர்களுக்கான சீசன் டிக்கெட்டுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள வேளையில், வற் வரி விதிப்பால் மக்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும் அல்லல்களுக்கும் உள்ளாகியுள்ள இவ்வேளையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நாடாளுமன்றத்தில் அரசுடன் தொடர்புடைய அமைச்சர்கள் குழுவொன்று துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான ஹன்ஸகாவா மற்றும் தியாகொவுல்லா ஆகிய இரண்டு கப்பல்களைப் பயன்படுத்தி கடந்த இரு நாள்களுக்கு முன்பு கடலில் விருந்துபசாரக் கொண்டாட்டமொன்றை நடத்தியுள்ளனர், இதற்குத் துறைமுக அமைச்சர் எழுத்து மூல அனுமதியும் வழங்கியுள்ளார்.

நாடு வங்குரோத்தாகிக் கிடக்கும் இவ்வேளையில் மதுபானம், துறைமுகத்தில் உள்ள உணவகத்தில் இருந்து உணவு குடிபான வகைகளை கூடப் பெற்றுக் கொண்டு, நாட்டுக்குச் சொந்தமான கப்பல்களைப் பயன்படுத்திக் கொண்டு எரிபொருளை விரயம் செய்வதும், நடுக்கடலில் விருந்து நடத்தி கொண்டாட்டம் நடத்த, கும்மாளமடிக்க முடியுமா என்பதும் பிரச்சினைக்குரிய விடயம்.

அமைச்சர்களின் தனிப்பட்ட செலவில் இந்த விருந்துபசாரங்களை நடத்துவது பிரச்சினையல்ல என்றாலும், அரச வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான விருந்துபசாரங்கள் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.