கூகுல் நிறுவனத்தில் ஆட்குறைப்பு.
சான் ஃபிரான்சிஸ்கோ: உலகின் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனமான கூகல் நிறுவனத்தில் பல நூறு பேர் ஆட்குறைப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.
ஜனவரி 10ஆம் தேதி அந்நிறுவனம் ஆட்குறைப்பு செய்தது. இதில் முக்கிய பொறியியல் பிரிவில் வேலை பார்த்த பலர் வேலை இழந்தனர்.
அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தி வருவதால் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக ஆட்குறைப்பு இடம்பெற்றுள்ளது.
கூகல் அஸிஸ்டண்ட், குரல் மூலம் இயக்கப்படும் மெய்நிகர் உதவி, பிக்சல் கைபேசியைத் தயாரிக்கும் வன்பொருள், ஃபிட்பிட் கைக்கடிகாரம், நெஸ்ட் தெர்மோஸ்டாட் உள்ளிட்ட பிரிவுகளிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாக விவரமறிந்த மூவர் கூறினர்.
நிறுவனத்தின் பிரதான பொறியியல் பிரிவில் வேலை பார்க்கும் எராளமானவர்கள் தங்களுடைய வேலை இழப்பு பற்றி அறிவிப்பு மூலம் தெரிந்துகொண்டனர். அவர்களால் அலுவலகத்தில் நுழைய முடியவில்லை.
“சில கூகல் ஊழியர்களின் தற்போதைய வேலைவாய்ப்புப் பற்றி நாங்கள் சில சிரமமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. உங்கள் பொறுப்பு நீக்கப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று பொறியியல் பிரிவில் உள்ள ஊழியர்களிடம் நிறுவனம் கூறியதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ தகவல் தெரிவித்தது.
“எங்கள் நிறுவனத்தின் மிகப்பெரிய முன்னுரிமைகள் மற்றும் வருகின்ற முக்கிய வாய்ப்புகளில் நாங்கள் பொறுப்புடன் முதலீடு செய்யவிருக்கிறோம்,” என்று கூகல் செய்தித் தொடர்பாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி முழுவதும் ஆட்குறைப்பு செய்யப்பட்ட பிறகு சில பிரிவுகள் இந்த வகையான நிறுவன மாற்றங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றன. இதில் உலகளாவிய சில பொறுப்புகளை நீக்குவதும் அடங்கும்.
கூகல், மெட்டா மற்றும் அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் 2023ல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த பிறகு தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.