விரைவில் சிங்கப்பூர்-மலேசியா இடையில் கடப்பிதழ் தேவையில்லா குடிநுழைவு முறை.
சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான தரைவழிப் பயணங்களில் இனி கடப்பிதழ் தேவையில்லா குடிநுழைவு முறை நடப்புக்கு வரக்கூடும்.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத் திட்டத்தின்கீழ், கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவு நடைமுறைகளை விரைவாகப் பூர்த்தி செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவது இதற்குக் காரணம்.
இத்திட்டத்தின்கீழ், சிங்கப்பூர் வர்த்தகங்கள் ஜோகூரில் கடை திறக்க உதவும் வர்த்தக, முதலீட்டுச் சேவை நிலையத்தை ஜோகூரில் அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், நிலச் சோதனைச் சாவடிகளில் சரக்குகளை அனுமதிக்கும் நடைமுறையை மின்னிலக்கப்படுத்துதல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.
சிறப்புப் பொருளியல் வட்டாரம் தொடர்பில் பணியாற்றும் வேளையில், முதலீட்டாளர் கருத்தரங்கை இணைந்து ஏற்பாடு செய்யவும் இரு நாடுகளும் திட்டமிடுகின்றன. சிறப்புப் பொருளியல் வட்டாரம் குறித்து வர்த்தகங்களிடம் கருத்துத் திரட்ட இது உதவும்.
வர்த்தக, தொழில் அமைச்சும் மலேசியாவின் பொருளியல் அமைச்சும் வியாழக்கிழமை (ஜனவரி 11) வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சிறப்புப் பொருளியல் வட்டாரம் தொடர்பான புரிந்துணர்வுக் குறிப்பில் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்கும் மலேசியப் பொருளியல் அமைச்சர் முகமது ரஃபிஸி ரம்லியும் கையெழுத்திட்டனர். பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் கையெழுத்து நிகழ்ச்சியைப் பார்வையிட்டனர்.
ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பொருளியல் பிணைப்பை வலுப்படுத்த இத்திட்டம் உதவும்.
ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் மக்கள் போக்குவரத்து சுமுகமாக இடம்பெறுவதற்கும் பொருள்கள் தங்கு தடையின்றிச் செல்வதற்கும் இது கைகொடுக்கும்.
“இரு நாடுகளும் இருதரப்பு ஆற்றல்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் சேர்ந்து வளர்ச்சி காணவும் சிறப்புப் பொருளியல் வட்டாரம் பாலமாக அமையும்,” என்று அமைச்சர் கான் கூறினார்.
“சிறப்புப் பொருளியல் வட்டாரம் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பை வழங்குகிறது,” என்று மலேசிய அமைச்சர் ரஃபிஸி குறிப்பிட்டார். சரக்குப் போக்குவரத்து, மக்கள் போக்குவரத்து இரண்டுடன் வர்த்தக சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும் ஜோகூர், சிங்கப்பூர் என இரு தரப்பின் பொருளியல் ஈர்ப்பை உயர்த்துவதற்குமான வாய்ப்புகளை அவர் சுட்டினார்.