‘மென்பொருள் சேவைகளின் தலைநகராக சென்னை மாறிவருகிறது’: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
நமது நாட்டின் மென்பொருள் சேவைகளின் தலைநகராக சென்னை மாறிவருகிறது என்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா் .
புரூக்ஃபீல்ட் அஸ்ஸெட் மேனேஜ் மென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் டிஜிட்டல் ரியாலிட்டி ஆகிய நிறுவனங்கள் இணைந்து அதிக அளவிலான, தரவு மற்றும் தகவல்கள் சேமிப்புத்திறன் கொண்ட மையம் சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ள இம்மையத்தின் திறப்புவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த தரவு மைய கட்டடத்தை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசியது:
இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக சென்னை உள்ளது. சென்னையில், குறுகிய காலத்தில் ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவின் மிக முக்கிய தரவு மையமாகவும், மென்பொருள் சேவைகளின் தலைநகராகவும் தற்போது சென்னை வளா்ந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதிலும், ஏற்றுமதி மற்றும் மென்பொருள் சேவைகளில் வேகமாக வளா்ச்சி அடைவதிலும் நமது நாடு தற்போது முனைப்புக் காட்டி வருகிறது.
இந்நிலையில், நமது நாட்டின் மென்பொருள் சேவைகளின் தலைநகராக சென்னை மாறிவருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சமூகத்தின் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் இந்த தரவு சேமிப்பு மையங்கள் இருக்கும் என்றும், இது மேலும் மிகப்பெரிய முன்னேற்றமடைய வேண்டும் என்பது எனது விருப்பம் என்றாா் அவா்.
இந்நிகழ்வில், டிஜிட்டல் கனெக்ஷனின் தலைமை நிா்வாக அதிகாரி சிபி வேலாயுதன், ரிலயன்ஸ் நிறுவன தலைவா் எம். பாலசந்திரன், ‘டிஜிட்டல் ரியாலிட்டி’ முதன்மை முதலீட்டு அதிகாரி கிரிக் விரிட், ஆசிய பசுபிக் அமைப்பின் டிஜிட்டல் ரியாலிட்டி தலைவா் சரீனே நா, ‘புரோக் ஃபீல்ட் தரவு மைய மேலாண் இயக்குநா் உதய் மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.