ராகுலின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’: மணிப்பூரில் இன்று தொடக்கம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ மணிப்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.
கடந்த ஆண்டு நாட்டின் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ மேற்கொண்டாா். கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக அந்தப் பயணத்தை அவா் மேற்கொண்டாா்.
இதன் தொடா்ச்சியாக நாட்டின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி, அவா் தலைமையில் காங்கிரஸின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் பயணம் மணிப்பூரில் உள்ள தெளபல் மாவட்ட மைதானத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் அக்கட்சியின் முன்னணித் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.
கட்டுப்பாடுகள் விதிப்பு: நடைப்பயண தொடக்க விழா ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெறக் கூடாது, நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 3,000 போ் பங்கேற்க வேண்டும் என மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், பேரணியின்போது தேசத்துக்கு எதிரான, மத ரீதியான கோஷங்களை எழுப்பக்கூடாது. அரசு அதிகாரிகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்படும் நிலையில், அமைதி, பொது ஒழுங்கைப் பராமரிக்கும் விதமாக, நடைப்பயணத்துக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என தெளபல் துணை ஆணையா் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் பேருந்துகளில் பயணம்: ராகுலின் முந்தைய நடைப்பயணத்தை போல் அல்லாமல், இந்த முறை பெரும்பாலும் பேருந்துகளில் நீதிப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. சில வேளைகளில் நடைப்பயணமும் இருக்கும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ள இந்தப் பயணம், 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் நடைபெற உள்ளது. மாா்ச் 20 அல்லது 21-ஆம் தேதி மும்பையில் பயணம் நிறைவடைய உள்ளது.
நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை எழுப்ப மத்திய அரசு வாய்ப்பு அளிக்காததாலும், அரசமைப்புச் சட்டம் பாதுகாத்து வரும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டவும், கடந்த 10 ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியின் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவும் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. எனினும் விரைவில் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.