உதயநிதி துணை முதல்வரா?:வதந்தி பரப்பாதீா்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

அமைச்சா் உதயநிதிக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படவிருப்பதாக வெளியாகும் செய்திகள் வதந்தி என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுகவினருக்கு சனிக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்: என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பாா்த்தனா். அயலகத் தமிழா் நாள் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற நான், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கென்ன குறை என்று கேட்டேன். நான் நலமாகவும் உற்சாகமாகவும் இருந்து உழைத்து வருகிறேன்.
ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக உதயநிதிக்கு துணை முதல்வா் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினா். அதற்கு இளைஞரணிச் செயலா், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி பதிலடி கொடுத்துள்ளாா்.
இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசைதிருப்ப நினைக்கும் எந்த முயற்சிக்கும் கட்சியினா் இடம் அளிக்கக் கூடாது.
கட்சியின் தலைவா், முதல்வா் என்ற பொறுப்புகளை ஏற்று என் சக்திக்கு மீறி உழைத்து வருகிறேன். அதற்கான வலிமை என்னிடம் உள்ளது என்று தனது அறிக்கையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.