தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ராஜபக்சக்களே காரணமாம்! – இப்படிச் சொல்கிறார் மஹிந்த.
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ராஜபக்சக்களே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதப் போராட்டத்தால் இந்த நாட்டில் மூவின மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அதில் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.
2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பயங்கரவாதப் போராட்டத்துக்கு நாம் முடிவு கட்டிய பின்னர் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள். ஆனால், அவர்களை வைத்துக்கொண்டு இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளும், வெளிநாடுகளில் வாழும் புலிகளின் ஆதரவாளர்களும் சுயலாப அரசியலை நடத்துகின்றனர். இது கவலையை ஏற்படுத்தும் விடயம். அவர்கள், தமிழ் மக்கள் மீது போராட்ட சிந்தனையைத் தூண்டினாலும் அந்த மக்கள் மீண்டும் போரை விரும்பவில்லை. நிம்மதியான வாழ்க்கையே அவர்களின் விரும்பம். அதை நாம் அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தவுடன் ஏற்படுத்திக் கொடுத்து விட்டோம்.
வடக்கு – கிழக்கில் ராஜபக்சக்களை ஆதரிக்கும் தமிழ் உறவுகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு நாம் என்றும் நன்றி கூறுவோம்.
எதிர்வரும் தேர்தல்களில் வடக்கு – கிழக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படாது. வழமை போன்று எமக்குரிய வாக்குகள் கிடைக்கும். மொட்டுக் கட்சியின் வெற்றியில் தமிழ் மக்களின் பங்களிப்பும் முக்கிய இடம் வகிக்கும்.” – என்றார்.