20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவதால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நீதியமைச்சர் அலி சப்றி, அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் நோக்கில் இந்த புதிய திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது கமரா அவர்கள் பக்கம் திருப்பப்படாமை ஏனென்று கபீர் ஹாசிம் எம் பி கேள்வியெழுப்பியதுடன் , இப்போதே 20 ஆவது திருத்தம் வந்துவிட்டதாவென கேள்வியெழுப்பினார்.
இதன் பின்னர் 20வது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் மற்றும் குழு நிலை விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த திருத்தச் சட்டத்திற்கான திருத்தங்கள் குழு நிலை விவாதத்தின் போது முன்வைக்கப்பட உள்ளன. இதனையடுத்து அந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
அதேவேளை 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின்னர், அதற்கு எதிர்ப்பை வெளியிடும் பிரஜைகள் ஏழு நாட்களுக்கு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என நாடாளுமன்ற செயலாளரின் அலுவலகம் கூறியுள்ளது.
இதன் மூலம் அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவின் அரசியலமைப்பு ரீதியான செல்லுப்படி தன்மையை சவாலுக்கு உட்படுத்த முடியும்.