பங்களாதேஷ் தேர்தல் – ஜனநாயகத்தின் வெற்றியா? – சண் தவராஜா
தெற்காசிய நாடான பங்களாதேஷில் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. பிரதான எதிர்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் மிகவும் குறைந்தளவு விழுக்காடு வாக்காளர்களே பங்குகொண்ட இந்தத் தேர்தலில் நடப்பு அரசுத் தலைவியான ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் பெருமளவு ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தேர்தலின் முடிவில் வெற்றியைக் கொண்டாடுவதை விடவும் அதிகளவு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதையே அவதானிக்க முடிகின்றது.
உலகின் இளமையான நாடுகளுள் ஒன்று பங்களாதேஷ். 1947இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட பாகிஸ்தானில் ‘கிழக்குப் பாகிஸ்தான்’ என அறியப்பட்ட பகுதியே இன்றைய பங்களாதேஷ். 1971ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் சுதந்திரக் குடியரசாக உதயமான இந்த நாடு உலகின் மக்கள்தொகை அதிகமான நாடுகளின் வரிசையில் எட்டாவது இடத்திலும், இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 17 கோடி மக்கள் வாழும் இந்த நாடு தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி தைத்த ஆடைகளின் ஏற்றுமதி மூலம் அந்த நாடு 47 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. இது அந்த நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 84 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.
350 ஆசனங்களைக் கொண்ட இந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் 300 உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர். ஏனைய 50 ஆசனங்கள் நியமன அடிப்படையில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. யனவரி 7ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் அவாமி லீக் கட்சி 222 ஆசனங்களை வென்றுள்ளது. நடப்பு எதிர்க்கட்சியான யதியா கட்சி 11 ஆசனங்களையும் சுயேட்சை உறுப்பினர்கள் 62 ஆசனங்களையும் வென்றுள்ளனர்.
41.8 விழுக்காடு மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டதாக பிரதம தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ள போதிலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனப் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட பன்னாட்டு நோக்கர்கள் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக அறிவித்துள்ள போதிலும், பெரும்பாலான வாக்குச் சாவடிகள் வெறிச்சோடிக் காணப்பட்டதாகவும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அளவில் வாக்காளர்கள் கலந்து கொண்டிருக்க வாய்ப்பு இல்லை எனவும் சுயாதீன நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.
தற்போதைய தலைமை அமைச்சர் ஷேக் ஹசினாவை சர்வாதிகாரி, மோசடிப் பேர்வழி என வர்ணித்துவரும் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி, ஹசினா பதவியைத் துறந்து சுதந்திரமான காபந்து அரசாங்கம் ஒன்றின் பொறுப்பில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையிலேயே தேர்தல் பகிஸ்கரிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. அது மாத்திரமன்றி தேர்தல் நாளன்றும் அதற்கு முந்திய நாளன்றும் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன் ஆர்ப்பாட்டங்களையும் பரவலாக நடத்தியிருந்தது.
76 வயது நிரம்பிய ஹசினா பங்களாதேஷின் அரசியலில் நிராகரிக்கப்பட முடியாத நபராக உள்ளார். பங்களாதேஷின் விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மூத்த புதல்வியான இவர் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக தேர்தலில் வெற்றிபெற்று தலைமை அமைச்சராக விளங்கி வருகின்றார். 1998ஆம் ஆண்டு முதல் தலைமை அமைச்சராகப் பதவி வகித்துவரும் இவர் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்று 5 ஆண்டுகள் தலைமை அமைச்சராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷின் முதலாவது பெண் தலைமை அமைச்சரான காலிடா ஷியாவும் ஹசினாவும் முன்னாள் தோழிகள். 1990இல் இருவரும் இணைந்து அப்போதைய இராணுவ சர்வாதிகாரியான ஹுசைன் எர்சாட்டுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். 1991ஆம் ஆண்டுத் தேர்தலில் காலிடா ஷியா வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இருவரது உறவிலும் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசலே பங்களாதேஷின் அரசியல் வரலாறாக இன்றுவரை உள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 2018இல் ஹசினா அரசாங்கத்தால் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காலிடா ஷியா நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த வருடம் முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சார்ந்த பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் அரசாங்கத்தால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் ஓகஸ்ட் தொடக்கம் இன்றுவரை இந்தக் கட்சியின் உறுப்பினர்கள் 27,200 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 104,000 பேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழங்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. 27 வரையான கட்சி உறுப்பினர்கள் பல்வேறு வன்முறைகளில் கொல்லப்பட்டுள்ளனர். கட்சியின் வாரிசு எனக் கருதப்படும் காலிடா ஷியாவின் புதல்வர் ராறிக் ரஹ்மான் நாட்டைவிட்டுத் தப்பியோடி இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வருகிறார்.
ஹசினாவின் தேர்தல் வெற்றிக்குப் பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ள நிலையில், அந்தத் தேர்தல் வெற்றியை மேற்குலக நாடுகள் கொண்டாட மறுத்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியைப் போட்டியில் இருந்து அகற்றிவிட்டு அவாமி லீக் எளிதான வெற்றியை மோசடியாகப் பெற்றிருக்கின்றது என்பதே அவற்றின் குற்றச்சாட்டு. இத்தகைய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள ஹசினா, “யார் என்ன நினைக்கின்றார்கள் என்பது முக்கியமல்ல. பங்களாதேஷ் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதே முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.
எதிரும் புதிருமான கருத்துக்கள் பொதுவெளியில் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் பங்களாதேஷில் ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள போதிலும் அங்கே நிஜத்தில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு உள்ளதா என்ற ஐயம் எழுவதைத் தடுக்க முடியவில்லை.
கொரோனாக் கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்திய காலகட்டத்தில் பங்களாதேஷ் பொருளாதார அடிப்படையில் பெற்ற முன்னேற்றம் கணிசமானது. ஒரு கட்டத்தில் அயல் நாடான இந்தியாவை விடவும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக பங்களாதேஷ் பதிவாகி இருந்தது. பொருளாதார நெருக்கடியில் சிறி லங்கா சிக்கித் தவிக்கும் இன்றைய காலகட்டத்தில் பங்களாதேஷிடம் சிறி லங்கா கையேந்தி நின்றதைப் பார்க்க முடிந்தது. இத்தகைய பொருளாதார வளர்ச்சி ஹசீனா அம்மையாரின் ஆட்சியிலேயே சாத்தியமானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பொருளாதார வளர்ச்சிக்காக அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கிடப்பில் போடுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதே கேள்வி.
விமர்சனங்கள் எத்தகையதாக இருந்தாலும் ஹசீனாவின் ஆட்சி அடுத்த ஐந்து வருடங்களுக்குத் தொடரவே போகின்றது. பிரதான எதிர்க்கட்சி முடக்கப்பட்டுள்ள நிலையிலும், நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையிலும் ஆட்சி மாற்றத்தைக் கோரும் மக்கள் போராட்டங்கள் வெடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதே நோக்கர்களின் கருத்தாக உள்ளது. அது மாத்திரமன்றி தனது அயல் நாடுகளுடன் மாத்திரமன்றி இந்தியா, சீனா மற்றும் ரஸ்யா போன்ற வல்லரசு நாடுகளுடனும் பங்களாதேஷ் அரசு நல்லுறவைப் பேணி வருகின்றது.
மனித உரிமைகளை விடவும் பொருளாதார நலன்களே பிரதானம் எனக் கருதும் உலகின் இன்றைய போக்கில் ஹசீனாவின் ஆட்சிக்கு உள்நாட்டில் இருந்தும், வெளியில் இருந்தும் பாரிய அழுத்தங்களோ, அச்சுறுத்தல்களோ இப்போதைக்கு இல்லை என்பதே பங்களாதேஷின் இன்றைய நிலை உணர்த்தும் சேதியாக உள்ளது.