துமிந்தவுக்கு கோட்டா வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு செல்லாது : உறுதியானது மரண தண்டனை.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது என இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று (17) ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பிலேயே உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
பிரிதி பத்மன் சூரசேன தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவியான சுமணா பிரேமச்சந்திர, அவரது மகளும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளருமான சட்டத்தரணி கஸாலி ஹுசைன் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் மற்றும் துமிந்த சில்வா ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வழக்கின் விபரம் இதுதான் ….
2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 05 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
விசாரணைக்குப் பின்னர், துமிந்த சில்வா உட்பட ஐந்து பிரதிவாதிகளதும் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு , அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி, துமிந்த சில்வா மற்றும் இருவர் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்ததுடன், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனை , ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் நடவடிக்கையில், முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாததால், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும், துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பை வழங்குமாறும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை கடந்த மே மாதம் 31ஆம் திகதி பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம், இந்த மனுவை விசாரிப்பதற்கு அனுமதி வழங்கியதுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவையும் பிறப்பித்தது.
அன்றைய தினம் அவரை மீண்டும் சிறையில் அடைக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்ததுடன், அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டை இடைநிறுத்தவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்த மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு நீதிமன்றம் முன்னர் அனுமதி வழங்கியிருந்தது.
ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன். ஜெஃப் அழகரத்தினம், கே. கனகேஸ்வரன், சட்டத்தரணி எராஜ் சில்வா, சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு மனுதாரர்கள் சார்பில் ஆஜராகியிருந்தனர்.