இலங்கை சரித்திரத்திலேயே பதிவாகிய முதலாவது தீர்ப்பை வரவேற்கின்றோம் – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு.
“இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக இன்று வருகை தந்திருந்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, துமிந்த சில்வாவுக்குக் கொடுத்த பொது மன்னிப்பைப் புறந்தள்ளி அது தவறாகச் சட்டவிரோதமாகக் கொடுக்கப்பட்ட பொதுமன்னிப்பு என்றும், அது செல்லுபடியற்றது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலை சம்பந்தமாக மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட துமிந்த சில்வாவுக்கே இந்தத் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பிலே நான் ஆஜராகி இருந்து இந்த வழக்கை வாதாடி இருக்கின்றேன்.
இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வரவேற்க வேண்டிய ஒரு விடயம். வேறு சில வழக்குகளும் நிலுவையிலே இருக்கின்றன.
விசேடமாக மிருசுவில் படுகொலையாளி சுனில் ரட்நாயக்கவுக்குக் கொடுத்த பொதுமன்னிப்பையும் நாங்கள் சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம். அந்தத் தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை.” – என்றார்.