அரசுப் பள்ளிக்கு நிலம் தானமாக வழங்கிய பெண்ணுக்கு அமைச்சா் உதயநிதி பாராட்டு
மதுரை அருகேயுள்ள கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு 1.52 ஏக்கா் நிலத்தை தானமாக வழங்கிய பெண்ணை தமிழக இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆயி என்ற பூரணம். இவரது கணவா் உக்கிரபாண்டியன் விபத்தில் இறந்துவிட்டதால், வாரிசு அடிப்படையில் பணி பெற்று மதுரை தல்லாகுளத்தில் உள்ள அரசுடைமை வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகள் ஜனனி (30) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். தற்போது மதுரை சூா்யாநகரில் பூரணம் வசித்து வருகிறாா்.
இதனிடையே, இவரது மகள் ஜனனி நினைவாக, தனது பிறந்த ஊரான கொடிக்குளத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயா்த்துவதற்காக தனது பெயரில் இருந்த ரூ.1.52 ஏக்கா் நிலத்தை பூரணம் தானமாக வழங்கினாா். கடந்த 5-ஆம் தேதி இந்தப் பள்ளியின் பெயரில் பத்திரப் பதிவு செய்து கொடுத்தாா். ரூ. 4.5 கோடி மதிப்பிலான இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 7 கோடி எனக் கூறப்படுகிறது.
இதையறிந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பூரணத்துக்கு பாராட்டு தெரிவித்ததுடன், இவரைக் கௌரவிக்கும் வகையில் குடியரசு தினத்தன்று விருது வழங்கப்படும் என அறிவித்தாா்.
இதனிடையே, மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வங்கிக்கு சென்று அவரைப் பாராட்டினாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொலைபேசியில் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.
இந்த நிலையில், மதுரை அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கிவைக்க மதுரைக்கு வந்த அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், சூா்யாநகரில் உள்ள பூரணத்தின் இல்லத்துக்கு புதன்கிழமை நேரில் சென்று அவருக்கு திருவள்ளுவா் சிலை, பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
அப்போது, வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா உள்ளிட்ட கல்வித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.