பில்கிஸ் பானு: குற்றவாளிகள் சரணடைவதில் திடீர் திருப்பம்
பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளில் மூவர், சரணடைய கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பில்கிஸ் பானு ஆளாக்கப்பட்டு, அவரது 3-வயது குழந்தை உள்பட 7 குடும்ப உறுப்பினா்களைக் கொலை செய்த வழக்கில் 11 போ் குற்றவாளிகளாக மும்பை உயா்நீதிமன்றம் அறிவித்தது.
அவா்களை குஜராத் அரசு 2022-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது முன்கூட்டியே விடுவித்தது. இதை எதிா்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யும் குஜராத் அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ஜனவரி 8ஆம் தேதி ரத்து செய்தது.
மேலும், குஜராத் உயா்நீதிமன்றத்தின முந்தைய உத்தரவுகளை குற்றவாளிகள் மறைத்து உச்சநீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதாகவும், குஜராத் அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்தத் தகவல்களை மறைத்துவிட்டு மோசடியான உத்தரவை பெற்றுவிட்டதாகவும் உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளும் 2 வாரங்களில் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவு குறித்த அதிகாரபூா்வ தகவல் ஏதும் இதுவரையில் கிடைக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட தஹுடு மாவட்ட கண்காணிப்பாளா் பல்ராம் மீனா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேர் தரப்பில், சரணடைய மேலும் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சரணடைவதற்கும், சிறையில் அடைப்பதற்கும் கால அவகாசத்தை நீட்டிக்க விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மூன்று குற்றவாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த கால அவகாசம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெறவிருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.