காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்: சந்தேகநபர்களின் வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்!
கொழும்பு, காலிமுகத்திடலில் கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் அனைவரினதும் வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்றுப் புத்தங்களமாய் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிவான், குடிவரவு – குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அறிவிக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன என்றும், அதற்கான கோப்பு சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மிலன் ஜயதிலக்க, சனத் நிஷாந்த மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 36 சந்தேகநபர்களில் 30 பேர் திறந்த நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.