கொடநாடு வழக்கு: ஜன.30-இல் இபிஎஸ் உயா்நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஜன. 30, 31-ஆம் தேதிகளில் மாஸ்டா் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்கவுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடா்புபடுத்தி காணொலி வெளியிட்ட தில்லியை சோ்ந்த பத்திரிகையாளா் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையாா் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி, ரூ. 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டா் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த வழக்கில்,
நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்குரைஞா் ஆணையராக எஸ்.காா்த்திகை பாலனை நியமித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வு, ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாள்கள் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தொடா்ந்த வழக்கு, நீதிபதி என்.சதிஷ்குமாா் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில், இருநீதிபதிகள் உத்தரவின்படி வரும் 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மாஸ்டா் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை பிப். 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.