சப்-இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி வெடித்து, சாரதி மரணம் : போலீசை சுற்றி வளைத்த மக்கள் (துப்பாக்கிச் சூடு நடந்த தருணத்தின் வீடியோ காட்சிகளுடன்)
நாரம்மல , தம்பலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (18) சிவில் உடையில் நின்ற பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற லொறியை நிறுத்தி சோதனையிடும் போது, பொலிஸாரின் கையிலிருந்த துப்பாக்கிப் வெடித்து லொறியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்படும் சம்பவம் தொடர்பில் நாரம்மலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெருந்தொகையான மக்கள் நாரம்மல பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்து வன்முறையில் ஈடுபட்டதால், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அருகிலுள்ள பல பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு வரவழைக்கப்பட்டதாக குருநாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் அதே பகுதியில் வசிக்கும் பெயிண்ட் டெக்னீசியன் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தின் பின்னர், சந்தேகத்தின் பேரில் நாரம்மல பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்ட பின்னர், உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்படித்தான் நடந்து கொண்டார். சிவில் உடையில் இருந்த அவரை சிலர் , போலீசார் வரும்வரை வெளியேறாமல் தடுத்தனர். (வீடியோ)
நாரம்மல கிரியுல்ல வீதியில், தம்பலஸ்ஸ பிரதேசத்தில் , சிவில் உடையில் இருந்த போலீசார் லொறியை நிறுத்த முற்பட்ட போது , லொறியை செலுத்தியவர் நிறுத்தாமல் , வீதித் தடையொன்றின் ஊடாகச் சென்றுள்ளார். அந்த லொறியை , மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற போது , லொறியை செலுத்திய சாரதி லொறியை நிறுத்தியுள்ளார். லொறியை நிறுத்திய பின்னர் , அருகே சென்ற போலீசார் , சாரதியின் தலையில் துப்பாக்கியை வைத்து பயமுறுத்த முற்பட்ட போது , துப்பாக்கி தற்செயலாக வெடித்ததாக , துப்பாக்கியால் சுட்ட உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குறித்த 41 வயது 3 குழந்தைகளின் தந்தை உயிரிழந்தமை தொடர்பில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் நாரம்மலை போலீஸ் நிலையம் முன்பாக கூடி தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
போலீஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை அறிய, பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் விசேட புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழுவொன்று ஏற்கனவே அப்பகுதிக்குச் சென்றுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.