பிணத்தை வைத்து பிழைப்பு நடத்திய மாநகர சபைப் பணியாளர் மாட்டினார் – ஜனவரி 30ஆம் திகதி வரை விளக்கமறியல்.

மாத்தளை பிரதேசத்தில் தகனக் கிரியைகளின்போது பண மோசடி இடம்பெறுகின்றது எனக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுகளை அடுத்து மாநகர சபைப் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இடுகாட்டில் தகனக் கிரியைகளின்போது , சடலமொன்றுக்கு மேலதிகமாக 5 ஆயிரம் ரூபா அறவிடப்படுகின்றது என்று தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட மாத்தளை மாநகர சபைப் பணியாளர், மாத்தளை மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தளை மாநகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் வசிப்போரிடம் தகனக் கிரியைகளின் போது 20 ஆயிரம் ரூபாவும், மாநகர சபையின் அதிகாரத்துக்கு உட்படாத பிரதேசங்களைச் சேர்ந்தவர்களிடம் சடலமொன்றுக்கு 25 ஆயிரம் ரூபாவும் அறிவிடப்பட வேண்டும்.
எனினும், மாத்தளை மாநகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் சடலத்தை எரியூட்டுவதற்கு 25 ஆயிரம் ரூபா என்றடிப்படையில் போலியான பற்றுச்சீட்டுகளைத் தயாரித்து, அதனூடாக சடலமொன்றுக்கு 5 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் சந்தேகநபர் மோசடி செய்துள்ளார்.
இதன்படி இவர் இதுவரை 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மோசடி செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.