ரணில் ஜனாதிபதி பதவியில் நீடிக்க வேண்டும் என்பதில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அதிகம் விருப்பமாம் – விமல் எம்.பி. கண்டுபிடிப்பு.
“ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவியில் நீடிப்பதை அவரை விட இந்தியாவும், அமெரிக்காவுமே அதிகம் விரும்புகின்றன.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
“எட்கா உடன்படிக்கையைச் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் இலங்கை இந்தியாவின் மாநிலம் போல் ஆகிவிடும்.” – என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“எட்கா உடன்படிக்கை கொண்டுவரப்படக் கூடாது எனப் பல போராட்டங்கள் இடம்பெற்று, அந்த முயற்சி அன்று தோற்கடிக்கப்பட்டது. தற்போது எட்காவைக் கைச்சாத்திடுவதற்கு முயற்சி இடம்பெறுகின்றது. குறித்த உடன்படிக்கை கைச்சாத்திட்டால் இலங்கையில் சேவை சந்தைக்குள்ளும் இந்தியர்கள் வந்துவிடுவார்கள். இந்திய வைத்தியர்கள் மட்டுமல்ல விவசாயிகளும் வரமுடியும்.
இது இரு நாடுகளுக்குமானது என்று கூறப்பட்டாலும் ஒரு கதவுதான் திறக்கப்படும் என்பதே உண்மை.
அதேவேளை, இந்தியாவுக்கும், மேற்குலக நாடுகளுக்கும் தேவையான அனைத்து விடயங்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது நிறைவேற்றி வருகின்றார். இவை தொடர்பில் அரசியல் களத்தில் பேசப்படுவதில்லை.
இலங்கை மின்சார சபையை 8 ஆக உடைத்து விற்பனை செய்யும் திட்டம் 2003 இல் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த முயற்சி மீண்டும் இடம்பெறுகின்றது. சமூகத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதன் மூலம் மிகவும் சூட்சுமமான முறையில் நகர்வுகள் இடம்பெறுகின்றன. சிறு சம்பவங்களை உருவாக்குவதன்மூலம் பிரதான சம்பவங்கள் மறைக்கப்படுகின்றன.
சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. இவை தொடர்பில் மேற்குலக தூதுவர்கள் கதைப்பதில்லை. ஏனெனில் தமக்குத் தேவையானவற்றை ரணில் நிறைவேற்றுவார் என்பது அவர்களுக்கு தெரியும். கோட்டாபய ராஜபக்ச ஆட்சி காலத்தில் இப்படியான சட்டமூலங்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் அமெரிக்கத் தூதுவர் நாளொன்றுக்கு நான்கு ருவிட்டர் பதிவுகளையாவது பதிவிட்டிருப்பார்.
ரணிலை ஜனாதிபதி பதவியில் நீடிப்பதை அவரை விட இந்தியாவும், அமெரிக்காவுமே அதிகம் விரும்புகின்றன.” – என்றார்.