சுமந்திரனை தோற்கடித்து ஸ்ரீதரன், தமிழரசு கட்சியின் தலைமைக்கு தேர்வு
யாழ்ப்பாணம் தேர்தல் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவஞானம் சிறீதரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக இன்று (ஜனவரி 21) தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் பொதுக்கூட்டம் திருகோணமலையில் நடைபெற்ற போது , 184 மாவட்ட சபை உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார்.
தலைமைத்துவப் போட்டியில் கலந்து கொண்ட எம்.ஏ.சுமந்திரனுக்கு மாவட்ட சபைகளின் 137 பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
அக்கட்சியின் தலைமைத்துவத்துக்காக மும்முனைப் போட்டி ஆரம்பத்தில் நிலவியதுடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்துக்காக யாழ்ப்பாணத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்.யோகேஸ்வரன் ஆகியோர் வேட்புமனுக்களை கையளித்திருந்தனர்.
ஆனால் இறுதி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்.யோகேஸ்வரன் போட்டியிலிருந்து விலகினார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கொழும்பு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட சபைகளின் 337 பிரதிநிதிகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் இடம் பெற்ற வாக்கெடுப்பின் முடிவு :-
1. சிவஞானம் சிறிதரன்: 184
2. எம்.ஏ.சுமந்திரன்:137
3. எஸ்.யோகேஸ்வரன்: போட்டியிலிருந்து விலகினார்
யார் இந்த சிவஞானம் ஸ்ரீதரன் ?
1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி பிறந்த சிவஞானம் சிறீதரன் அவர்கள் தொழில் ரீதியாக ஆசிரியர்.
அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அதிபராக கடமையாற்றிய இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான ஸ்ரீதரன், அதற்கு முந்தைய ஒவ்வொரு தேர்தலிலும் யாழ்ப்பாணத் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாவார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வரலாறு
1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அன்றைய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் தலைமையில் இலங்கை தமிழரசுக் கட்சி உருவானது.
இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை கட்சித் தலைவர்கள், கட்சியின் செயற்குழுவினராலேயே ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பும் , கடந்த காலம் முழுவதும் இலங்கை தமிழரசுக் கட்சியிடமே இருந்தது.
1949க்குப் பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் இலங்கை தமிழரசுக் கட்சி போட்டியிட்டதுடன், கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்து, இலங்கை தமிழரசுக் கட்சி தேர்தலில் போட்டியிட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு புதிய தலைமை
1977 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன், 2004 ஆம் ஆண்டு முதல் கட்சியின் தலைவராக இருந்து வந்தார்.
அதன்பின் தற்போதைய கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா , 2014 ஆம் ஆண்டு கட்சியின் மத்திய குழுவின் ஏகமனதான சம்மதத்தின் பேரில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.
தற்போது கட்சியின் சிரேஷ்ட ஆலோசகராக கடமையாற்றும் ஆர்.சம்பந்தன் மற்றும் தற்போதைய கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் உடல்நலக் குறைவு காரணமாக கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய கட்சியின் நிறைவேற்று சபை தீர்மானித்தது.
உள்கட்சி சிக்கல்கள்
கட்சியின் தலைமைத்துவம் சிறிதரனிடம் செல்வதால் சுமந்திரன், எஸ்.யோகேஸ்வரன் ஆகியோருக்கு ஆதரவான குழுக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதுடன், இதனால் கட்சிக்குள் பல குழுக்களில் பிளவு ஏற்பட்டு எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் உருவாகலாம் என இலங்கை தமிழரசுக் கட்சியினர் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள பிரச்சனைகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பாகும்.
தொடக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏறக்குறைய ஏழு கட்சிகள் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் , தலைமைத்துவம் தொடர்பான கருத்து முரண்பாடுகளாலும் , ஒவ்வொரு கட்சிக்குள்ளும் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது மூன்று கட்சிகளுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சியும், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ அமைப்பும், தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பும் தற்போது கூட்டணியில் உள்ளன.
டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடேக்கலநாதன் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பல வருடங்களாக செயற்பட்டு வருவதால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை இலங்கை தமிழரசுக் கட்சித் தலைமையே தொடர்ந்து வைத்திருப்பதில், சில கருத்து முரண்பாடுகள் உள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலதிக இன்றைய செய்திகள்
வடக்கு மாகாணத்துக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும்! – ஆளுநரிடம் தூதுவர் உறுதி.
திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
அரிச்சல் முனையில் பிரதமர் மோடி!
வவுனியா – திருமலை வீதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு.
சந்திரயான்-3 விண்கலத்துடன் தொடர்பை ஏற்படுத்திய நாசா விண்கலம்!
கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை
தேர்தலை இலக்காகக் கொண்டு அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! – ‘மொட்டு’வில் பலருக்குப் பதவிகள்.
நேபாள பிரதமரைச் சந்தித்த ரணில்! – இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் பேச்சு.