எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ’20’ திருத்தத்தை சமர்ப்பித்தார் அலி சப்ரி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு தயாரித்த அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் குறித்த திருத்தச் சட்ட வரைவு இன்று பிற்பகல் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
20ஆவது திருத்தச் சட்ட வரைவு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வேளை அதற்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக 20ஆவது திருத்த வரைவை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் சபைக்கு நடுவே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், திருத்த வரைவு வாபஸ் பெறப்படவில்லை.
அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் நோக்கில் அரசால் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான விவாதம் மற்றும் குழு நிலை விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்தத் திருத்த வரைவுக்கான திருத்தங்கள் குழு நிலை விவாதத்தின்போது முன்வைக்கப்படவுள்ளன. இதையடுத்து அந்தச் திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றுவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படம்.
இதேவேளை, 20ஆவது திருத்த வரைவு தற்போது நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பை வெளியிடும் பிரஜைகள் ஏழு நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும் என நாடாளுமன்ற செயலாளரின் அலுவலகம் கூறியுள்ளது.
இதன்மூலம் 20ஆவது திருத்தச் சட்ட வரைவின் அரசமைப்பு ரீதியான செல்லுப்படித் தன்மையை சவாலுக்கு உட்படுத்த முடியும்.