பில்கிஸ் பானு வழக்கு:குற்றவாளிகள் 11 பேரும் சரண்
பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் மாநிலம் பஞ்சமஹாலில் உள்ள கோத்ரா சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சரணடைந்தனா்.
சிறை திரும்ப கூடுதல் அவகாசம் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து ஞாயிற்றுக்கிழமைக்குள் சரணடையுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவா்கள் சரணடைந்தனா்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, 21 வயது கா்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். மேலும், அவரின் குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் கொலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவா்களின் தண்டனைக் குறைப்பு குறித்து பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், குற்றவாளிகள் 11 பேரையும் கடந்த 2022-ஆம் ஆண்டு குஜராத் அரசு சிறையிலிருந்து விடுவித்தது.
இதற்கு எதிராக பில்கிஸ் பானு உள்பட பல்வேறு அமைப்புகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து அவா்கள் அனைவரும் 2 வாரங்களுக்குள் சிறையில் மீண்டும் அடைக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், அவா்கள் சிறைக்குத் திரும்ப கூடுதல் அவகாசம் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து ஞாயிற்றுக்கிழமைக்குள் சரணடையுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, குற்றவாளிகள் 11 பேரும் கோத்ரா சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சரணடைந்தனா்.
மேலதிக செய்திகள்
இந்திய நடிகைகளோடு ஹட்டனில் கோலாகலமாக தைப்பொங்கல் விழா (Photos)
விழாக்கோலம் பூண்டிருக்கும் அயோத்தி: முக்கிய பிரமுகர்கள் வருகை