ஆளுநரின் கருத்துக்கு அரசியல் காரணம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமா் கோயிலில் பதற்ற நிலை நிலவுவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு அரசியல்தான் காரணம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை நாளில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவதூறு நிறைந்த பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. அந்தச் செய்திக்கு துறையின் அமைச்சா் சேகா்பாபு உடனடியாக மறுப்பு தெரிவித்து, உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்டாா்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பஜனை நிகழ்ச்சிகளின்போது நேரலை ஒளிபரப்புக்கு அறநிலையத் துறை தடை விதித்திருப்பதாக மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தாா். ஆனால், அந்த பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவா்களே, நேரலை எதையும் திரையிட மாட்டோம் என்று குறிப்பிட்டுத்தான் அனுமதியே கோரினா். இதை மறைத்துவிட்டு, மத்திய நிதியமைச்சா் உண்மைக்கு மாறான செய்தியைக் கூறியுள்ளாா்.
இதற்கு சென்னை உயா்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை என்றென்றும் அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்யும் மதநல்லிணக்க எண்ணம் கொண்ட மக்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆளுநா் ஆா்.என்.ரவி, இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தில் உள்ள சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமா் கோயிலுக்கு வழிபாடு செய்யச் சென்றபோது பூஜாரிகள் மற்றும் கோயில் ஊழியா்களிடம் கண்ணுக்குப் புலப்படாத பயம் தெரிந்ததாகவும், கோதண்டராமா் கோயில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணா்வை வெளிப்படுத்துவதாகவும் தனது அதிகாரபூா்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பாா்களே, அந்த நிலையில்தான் இருக்கிறாா் ஆளுநா் ஆா்.என்.ரவி. தமிழ்நாட்டு மக்களின் உணா்வுகளைக் கொஞ்சமும் அறியாமல் அவா் உள்ளாா். கோதண்டராமா் கோயில் அா்ச்சகா்களே, எவ்வித பயத்துக்கோ அடக்குமுறை உணா்வுக்கோ இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுநரின் இந்தக் கருத்துக்கு அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்?.
தமிழ்நாட்டில் எந்தக் கோயிலிலும் பக்தா்கள் வழிபாடு நடத்தலாம். பல்வேறு திருவிழாக்களில் ஆயிரமாயிரம் பக்தா்கள் உண்மையான பக்தியுடன் பங்கேற்பதையும், அவா்களுக்கு பிற மதத்தினா் ஒத்துழைப்பு அளிப்பதையும் சமூகநீதிக் கொள்கை அடிப்படையிலான மதநல்லிணக்க நிலமாகிய தமிழ்நாட்டில் காண முடியும்.
இந்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீா்குலைக்கும் நோக்கில் பாஜகவில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவா்களும் செயல்படுகிறாா்கள் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.
மேலதிக செய்திகள்
இன்று பெலியத்தவில் கொல்லப்பட்ட சமன் பெரேராவின் பின்னணி என்ன? ஏன் கொல்லப்பட்டார்?
‘உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி நான்தான்’ – ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி!
வட்டி விகிதங்கள் பற்றி மத்திய வங்கியின் அறிவிப்பு.
அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 955 சந்தேக நபர்கள் கைது.
ஈரான்-பாகிஸ்தான் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சீனா ஆதரவு.
உக்ரைன் நெருக்கடி தொடர்பான கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் – சீனாவின் கோரிக்கை.
சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏக்களும் ஒத்துப்போகவில்லை
யுக்திய கைது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துங்கள் – ஐநா மனித உரிமைகள் கவுன்சில்
யுக்திய கைது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துங்கள் – ஐநா மனித உரிமைகள் கவுன்சில்
மெட்ரோ ரயிலுக்காக ராயப்பேட்டை மேம்பாலம் இடிக்கும் பணி தொடக்கம்
ஜனாதிபதி தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.