பூஜிதவின் வாக்குமூலத்தைக் கேட்க ஆணைக்குழுவுக்கு வந்த மைத்திரி!
பூஜிதவின் வாக்குமூலத்தைக் கேட்க
ஆணைக்குழுவுக்கு வந்த மைத்திரி!
– ஒக்டோபர் 5இல் அவருக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க ஆஜராகியிருந்த நிலையில், அதனைக் கேட்பதற்காக, மைத்திரிபால சிறிசேன, தனது சட்டத்தரணியுடன் அங்கு முன்னிலையாகியிருந்தார்.
இன்று முற்பகல் 9.30 மணியளவில் குறித்த ஆணைக்குழுவுக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, பிற்பகல் 12.10 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார்.
இதேவேளை, கட்டளையிடும் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சிசுக்குப் பொறுப்பானவராகவும், சட்டம் – ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையிலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திறனற்றதாகக் காணப்பட்டன என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, குறித்த ஆணைக்குழுவில், கடந்த வாரம் வழங்கிய வாக்குமூலம், முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். குறித்த விடயம் தொடர்பில் வாய்ப்புக் கிடைத்தால்தான் தெளிவுபடுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இது தமது கட்சிக்காரருக்குப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று ஹேமசிறி பெர்னாண்டோவின் சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.
ஆயினும், அண்மையில் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்தை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் மறுக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டமையை, மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணி இன்று ஆணைக்குழுவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 05ஆம் திகதியும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதியும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இன்று ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.