சு.க. தலைமையில் புதிய கூட்டமைப்பு – மைத்திரி முக்கிய கலந்துரையாடல்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுக் கூட்டமைப்பு ஒன்றை எதிர்காலத்தில் உருவாக்குவது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு – டாலி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி தற்போது நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் லான்சா மற்றும் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, நளின் பெர்னாண்டோ மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர் என்றும் கூறப்படுகின்றது.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கூட்டணி தொடர்பில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சமசமாஜ கட்சி என்பவற்றுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்படுகின்றது.