விவசாயம், சுற்றுலாத் துறைக்காக காணிகள் மீண்டும் விடுவிக்கப்படும் – கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு.
வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகளை விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்காக விடுவிப்பதற்கான பேச்சு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக 61 குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப பல வருடங்கள் செல்லுமென்று நாங்கள் உண்மையில் நினைத்திருந்தோம். ஆனால், எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் திறமையான முறையில் கையாண்டு, எமது நாட்டு மக்களுக்கு விடிவு காலம் வரும் வகையில் அதனை செயற்படுத்தி இருக்கின்றார். அதற்காக முதலில் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
மேலும், வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணம் உட்பட கிராமிய பொருளாதார அமைச்சுக்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய வகையில் இம்முறை நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் நேரடியாக கிராமிய பொருளாதார அமைச்சின் ஊடாக, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆடுகளை வழங்குதல் மற்றும் சிறு தானிய பயிர்ச்செய்கைக்கு அவசியமான விதைகளை வழங்கும் வேலைத்திட்டங்களும் இவற்றில் அடங்கும்.
இவ்வாறு பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியன் மூலம் எமது அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிதியில் சுமார் 95 வீதம் முதல் 98 வீதம் வரையில் செலவிடப்பட்டுள்ளது. அதன் ஊடாக மக்கள் பயனடைந்துள்ளனர்.
குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் இம்முறை பயறு அறுவடை பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் 1050 மெட்றிக் டொன் பயறு அறுவடை செய்யப்பட்டது. அத்துடன், ஆடு வளர்ப்பிலும் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக மேலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை நேரில் சென்று பார்வையிட்டு அது தொடர்பான விடயங்களை மக்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளோம். குறித்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கடந்த காலங்களில் எமக்கு வழங்கப்பட்ட நிதிகளை முழுமையாகவும் செயற்திறன்மிக்க வகையிலும் பயன்படுத்தியதன் காரணமாக இம்முறை எமக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மக்களுக்கு பயன்மிக்க வகையிலும் விரைவாகவும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
மேலும் வெளிநாட்டு உதவிகளுடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக விவசாய முன்னேற்றத்திற்காக குளங்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் 30 குளங்களும், வவுனியா மாவட்டத்தில் 31 குளங்களும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இவ்வேலைத்திட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர் அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மட்டுமன்றி குறித்த மாவட்டம் உட்பட முழு நாட்டினதும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய இது உதவும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மிகக் குறுகிய காலத்தில் மீளக்கட்டியெழுப்பியதன் காரணமாகவே இவ்வாறு கிராமிய பொருளாதார அமைச்சு மட்டுமின்றி அனைத்து அமைச்சுகளுக்கும் நிதிகள் வழங்கக் கூடியதாக உள்ளது. மேலும் மாவட்ட ரீதியிலும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விவசாய அமைச்சின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, உணவுத் தட்டுப்பாடு, போசாக்கின்மை போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதே தற்போது அரசின் முன்னுரிமைப் பணியாக உள்ளது. அத்துடன் இடைநடுவே கைவிடப்பட்ட அபிவிருத்திப் பணிகளும் மீண்டும் செயற்படுத்தப்படுகின்றன.
மேலும், ஏற்கனவே மக்கள் பயன்படுத்தி வந்ததும் தற்போது, வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கீழ் உள்ள காணிகளை மீண்டும் விவசாயம், சுற்றுலாத் துறை மேம்பாடு மற்றும் மக்கள் குடியிருப்புத் தேவைகளுக்காக அடர்ந்த காடுகள் அற்ற பகுதிகளை விடுவிப்பது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு எமது நாட்டில் மீண்டும் பொருளாதாரம் மீட்சி பெறுவதற்குத் திறமையான முறையில் செயற்படுகின்ற தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் அரச அதிகாரிகள் அனைவருக்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பலர் பல்வேறு விமர்சனங்களையும் தவறான குற்றச்சாட்டுகளையும் பரப்பினாலும் கூட பொதுமக்கள் இந்நாட்டின் பொருளாதார நிலைமையை உணர்ந்து செயற்படுகின்றனர்.
எனவே, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளுக்கு நாம் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.” – என்றார்.