வரியை விதித்து மக்களை நசுக்காமல் நாட்டைச் சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்! – நாடாளுமன்றில் அரசிடம் சஜித் வலியுறுத்து.
“அரசு திருடர்களைச் சரியாகப் பிடித்திருந்தால் வற் வரியை விதித்து மக்களை நசுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. எனவே, அரசு வற் வரியை அறவிடாமல் திருடிய திருடர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது வலியுறுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசில் இந்தத் திருடர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அனைத்து வித தண்டனைகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
எரிவாயு, சீனி, நானோ நைட்ரஜன், நிலக்கரி மற்றும் மல உர ஊழல்கள் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நிலையியல் கட்டளை 27 (2) இன் கீழ் அரசிடம் கேள்வி எழுப்பும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்கி,நாட்டு மக்களை மிகவும் நிர்க்கதியான எதிர்காலத்திற்கு ஆளாக்கிய தரப்பினர் யார் என்பதனை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் ஊடக வெளிக்கொணரப்பட்டது. இவ்வாறு வெளிக்கொணரப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ, அஜித் நிவாட் கப்ரால், எஸ்.ஆர்.ஆடிகல, பி.பி. ஜயசுந்தர, டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் சமந்தா குமாரசிங்க போன்றவர்களைத் தவிர பொறுப்புக் கூற வேண்டிய மேலும் பலர் இந்த அரசில் உள்ளனர். இந்த ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என வரிச்சுமைக்கு ஆளான மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எரிவாயு, சீனி, நானோ நைட்ரஜன், நிலக்கரி, மல உரம் போன்றவற்றுக்கு எதிரான விசாரணைகள் தாமதமாக இடம்பெற்றாலும், நுண், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு பரேட் சட்டத்தை அமுல்படுத்தி அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றது.
2019 – 2022 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பல முறைகேடுகள் தொடர்பான விசேட கணக்காய்வு விசாரணைகள் தொடர்பான பல சிக்கல்கள் உள்ளன.” – என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இது தொடர்பில் தனித்தனியாக கேள்விகளையும் எழுப்பினார்.