13ஆவது திருத்தத்தைப் பலவீனப்படுத்தியது தமிழ்க் கட்சிகளே! – நீதி அமைச்சர் குற்றச்சாட்டு.

“தமிழ்க் கட்சிகளால்தான் 13ஆவது திருத்தம் பலவீனமடைந்தது. 13ஆவது திருத்தம் தற்போது வழங்கும் அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.”
இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் போதாது என்றும், கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றன. 13ஆவது திருத்தம் இன்று நலினமடைந்திருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால், 13ஆவது திருத்தத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் உரிய முறையில் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கும் இதர உறுப்பினர்களுக்கும் இடையிலான கருத்து மோதல்களுக்கும் அரசியல் முரண்பாட்டுக்கும்தான் தமிழ்க் கட்சிகள் முக்கியத்துவம் வழங்கிச் செயற்பட்டனவே அன்றி, 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையாவது உரியமுறையில் பயன்படுத்த எத்தனிக்கவில்லை.
இதனால்தான் வடக்கு மாகாணத்துக்காக மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி, செலவிடப்படாமல் மீளத் திரும்பியது. கிழக்கு மாகாணத்திலும் இதேபோன்றதொரு நிலையே இருந்தது. ஆக, இருக்கும் அதிகாரங்களைக்கூட சரிவரப் பயன்படுத்தாமலிருந்துவிட்டு கூடுதல் அதிகாரங்களைத் தாருங்கள் என்று கேட்பது பொருத்தமற்றது.” – என்றார்.