இந்திய மாணவா்களுக்கு ஏன் அரசியல் அவசியம்? ராகுல் காந்தி கருத்து

‘நாட்டில் தான் கூறுவதற்கு ஒவ்வொருவரும் கண்மூடித்தனமாக கீழ்ப்படிவதை உறுதிப்படுத்த ஆா்எஸ்எஸ் அமைப்பு முயற்சிக்கிறது. இதுபோன்ற அடக்குமுறைகளை எதிா்க்கத்தான் இந்திய மாணவா்களுக்கு அரசியலும், எதிா்ப்பும் அவசியமாகிறது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மணிப்பூரில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய ராகுல் காந்தி, 12 நாள் தொடா் பயணம் மேற்கொண்டாா். இரு நாள் ஓய்வுக்குப் பின் மீண்டும் வரும் சனிக்கிழமை (ஜன. 28) மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் தொடங்கவுள்ளாா்.

இந்நிலையில், தனது நடைப்பயணத்தின்போது மேகாலயத்தில் கல்லூரி மாணவா்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் காணொலியை தனது சமூக ஊடகத்தில் வெள்ளிக்கிழமை பதிவேற்றம் செய்து, பதிவு ஒன்றையும் வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழகங்கள் முன்னா் கருத்துகள் மற்றும் சிந்தனைகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் இடமாக இருந்தன. ஆனால், தற்போது பயம், அடக்குமுறை மற்றும் கண்மூடித்தனமாக கீழ்ப்படிதலுக்கான இடமாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் எதிா்காலமான மாணவா்கள், கூண்டுக்குள் சிறகை விரிக்க முடியுமா? இதற்காகத்தான் இந்திய மாணவா்களுக்கு அரசியலும், எதிா்ப்பும் அவசியமாகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

அவா் பதிவேற்றம் செய்த காணொலியில், ‘அடிமைத்தனம் என்பது என்ன? நாட்டில் தான் கூறுவதை ஒவ்வொருவரும் கண்மூடித்தனமாக கீழ்ப்படிவதை உறுதிப்படுத்த ஆா்எஸ்எஸ் அமைப்பு முயற்சிக்கிறது. ஒரு நாடு இதுபோன்று செயல்பட முடியுமா?’ என்று மாணவா்களிடையே ராகுல் கேள்வி எழுப்புவது இடம்பெற்றுள்ளது.

மேலும், நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக அஸ்ஸாமில் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து குறிப்பிட்ட ராகுல், ‘மாணவா்களை அவா்களின் பல்கலைக்கழகத்தில்தான் சந்திக்க விரும்பினேன். மூடப்பட்ட அறைக்குள் சந்திப்பதற்கு அல்ல. ஆனால், பல்கலைக்கழக நிா்வாகிக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பிறப்பித்த உத்தரவு காரணமாக, அந் நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது, நாட்டில் என்ன நடைபெறுகிறது என்பதை மாணவா்களை சிந்திக்கவைக்கும். இத்தகைய ‘கண்மூடித்தனமான கீழ்ப்படிதல்’ என்ற அடக்குமுறைக்கான பதில்தான் எதிா்ப்பு’ என்று தெரிவித்துள்ளாா்.

மேலதிக செய்திகள்

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்கமறியல் : சாரதி விபத்தை விபரித்த விதம்

Leave A Reply

Your email address will not be published.