தேர்தலில் தனித்துப் போட்டியா, கூட்டணியா? பரபரக்கும் விஜய் அரசியல்
அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் விதமாக அடுத்தடுத்த நகர்வுகளை கடந்த ஆண்டு முதலே நடிகர் விஜய் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக பொதுத்தேர்வில் சாதித்த 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை நேரில் வரவழைத்து, அவரது கையால் பரிசு வழங்கி கவுரவித்த அவர், சுமார் 12 மணி நேரம் மேடையில் அசராமல் நின்றார். அப்போது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தனது மேடைப் பேச்சில் அறிவுறுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு நேரில் சென்று உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்களையும் விஜய் வழங்கினார். ஓர் அரசியல் கட்சியில் பல பிரிவுகள், அணிகள் இருப்பது போல தனது மக்கள் இயக்கத்திலும் பல்வேறு பிரிவுகளை விஜய் உருவாக்கி வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு நடிகர் விஜய் தலைமை தாங்கியிருப்பது, அரசியல் பார்வையாளர்களின் புருவத்தை உயர்த்தி உள்ளது. பனையூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடலாமா அல்லது ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கலாமாவென ஆலோசனை நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் மாவட்ட ரீதியாக இருக்கக்கூடிய மக்கள் இயக்க அடிமட்ட தொண்டர்களுக்கு பொறுப்பு வழங்கவும், விஜய் மக்கள் இயக்கத்திற்கான நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் எனவும் விஜய் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இன்னும் ஒரு மாதத்தில் விஜய் அரசியல் கட்சி தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கல்ல எனவும் சொல்லப்படுகிறது.
மேலதிக செய்திகள்
சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்கமறியல் : சாரதி விபத்தை விபரித்த விதம்
இந்திய மாணவா்களுக்கு ஏன் அரசியல் அவசியம்? ராகுல் காந்தி கருத்து