ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக மாபெரும் கறுப்புப் பட்டிப் போராட்டம்.
கறுப்பு ஜனவரியையொட்டி ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும், இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் மாபெரும் கறுப்புப் பட்டிப் போராட்டம் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபி முன்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்புத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு ஊடக அமையம், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆகியன இணைந்து இந்தக் கறுப்பு ஜனவரி கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன், சிவில் சமூகத்தைச் சேர்ந்த எஸ்.சிவயோகன், மதத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “தாக்காதே தாக்கதே ஊடகவியலாளர்களைத் தாக்காதே”, “எங்கே? எங்கே? ஊடகவியலாளர் எக்னெலிகொட எங்கே?”, “வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்” போன்ற கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.