குழப்பங்களுக்கு மத்தியில் தமிழரசின் பொதுச்செயலாளராக குகதாசன் நியமனம்! – தேசிய மாநாட்டைத் திடீரென ஒத்திவைத்தார் மாவை.
பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக திருகோணமலையைச் சேர்ந்த சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்தில் ஏனைய பதவிகளுக்கான தெரிவுக் கூட்டம் இன்று இடம்பெற்றது.
திருகோணமலை, மூன்றாம் கட்டைப் பகுதியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
முற்பகல் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதற்கமைய கட்சியின் பொதுச்செயலாளராக திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் சண்முகம் குகதாசனை நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. அதையடுத்து ஏனைய பதவிகளுக்கும் புதியவர்களின் பெயர்கள் இணக்கத்துடன் தீர்மானிக்கப்பட்டது.
அதையடுத்துப் பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய செயற்குழுவின் பட்டியலை அப்படியே ஏற்பது என்ற பிரேரணையை சி.சிறீதரன் முன்வைத்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன்பின்னர் பிற்பகல் பொதுச் சபை மீண்டும் கூடியது.
இந்தச் சந்தர்ப்பத்தில் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக சண்முகம் குகதாசனை நியமித்தமைக்கு எதிராக அவரின் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுச் சபை உறுப்பினர்களே போர்க்கொடி தூக்கினார்கள்.
இதையடுத்துப் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நியமித்த புதிய நிர்வாகக் குழுப் பட்டியலை ஏற்பதா? இல்லையா? என்று பொதுச் சபை உறுப்பினர்கள் மத்தியில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்பிரகாரம் மத்திய செயற்குழு நியமித்த புதிய நிர்வாகக் குழுவுக்கு ஆதரவாக 112 வாக்குகளும், எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதையடுத்துப் புதிய நிர்வாகக் குழு அங்கீகரிக்கப்பட்டது.
சிவஞானம் சிறீதரன் தலைமையிலான தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்தில் பொதுச்செயலாளராக ச.குகதாசனும், சிரேஷ்ட உப தலைவராக சி.வி.கே.சிவஞானமும், துணைப் பொதுச்செயலாளராக சேவியர்
குலநாயகயகமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இணைப் பொருளாளர்களாக ஞா.ஸ்ரீநேசன், பெ. கனகசபாபதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
துணைத் தலைவர்களாக கே.வி.தவராசா, சார்ள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், பா.அரியநேத்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இணைப் செயலாளர்களாக திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, ரஞ்சினி கனகராசா, த.குருகுலராஜா, ஈ.சரவணபவன், இரா.சாணக்கியன், சி.சிவமோகன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
செயற்குழு உறுப்பினர்களாக எம்.ஏ.சுமந்திரன், கருணாநிதி, பரஞ்சோதி, சயந்தன், ரவிகரன், இரட்ணவடிவேல், யோகேஸ்வரன், கோடீஸ்வரன், கனகசிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் இன்று மாலை நிறைவடைந்த பின்னர் நாளை நடைபெறவிருந்த கட்சியின் தேசிய மாநாட்டைக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா திடீரென ஒத்திவைத்துள்ளார். கட்சியின் புதிய தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகக் குழுவினர் நாளைய மாநாட்டில் அறிமுகம் செய்யப்படவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.