உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து விபத்து – 2 பெண்கள் பலி; 50 பேர் காயம்!

உளுந்தூர்பேட்டை அருகே, ஆசனூர் சிப்காட் எதிரில் லாரி, கார், பேருந்து என 3 வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதில் காரில் பயணம் செய்த பெண்கள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
திருச்சியில் இருந்து சரக்கு லாரி ஒன்று சென்னையை நோக்கி நேற்றிரவு வந்துகொண்டிருந்தது. அதே வழித்தடத்தில் திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி அழகுராஜா என்பவர் தனது மனைவி, மகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
ஆசனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, லாரியின் பின்பக்கம் கார் மோதியது. இந்த விபத்தின்போது, அதே வழியில் திருச்சியில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்து, ஏற்கனவே விபத்துக்குள்ளான கார் மீது மோதியது.
முன்பக்கம் லாரி, பின்பக்கம் பேருந்துக்கும் இடையே சிக்கிக்கொண்ட கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த அழகுராஜா பலத்த காயமடைந்தார். அவரின் மனைவியும், மகளும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கார் மீது மோதிய வேகத்தில் சொகுசுப்பேருந்து இடது புறம் உள்ள 10 அடி உயர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சொகுசு பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் மற்றும் 50 பயணிகள் காயமடைந்தனர்.
இந்த தொடர் விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து தகவல் அறிந்து காவலர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீண்ட போராட்டத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய வாகனங்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கினர். தைப்பூசம், குடியரசு நாள், வார இறுதி என தொடர் விடுமுறை முடிந்து பலரும் சென்னை திரும்பிய நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நேரிட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பலரும் சென்னை வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய கல்லூரி வாகனம்
இதேபோல் ஈரோடு வேப்பம்பாளையத்தில் இயங்கி வரும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
தனியார் கல்லூரி பேருந்து புறப்பட்ட 500 மீட்டர் தூரத்திலேயே கவிழ்ந்தது. இதில் பிபிஏ மூன்றாமாண்டு படிக்கும் மாணவி ஸ்வேதா என்பவர் உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த 20 பேருக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இருவேறு விபத்துகள் குறித்து காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.