பிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில் சபையில் கோட்டா அரசு இப்படிக் குற்றச்சாட்டு
“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.”
– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவித திருத்தமும் செய்யப்பட மாட்டாது.
எமது அரசு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தைப் போன்றதல்ல. இந்த நாட்டை நேசிக்கின்ற பிரதமரும், ஜனாதிபதியும் ஆட்சியில் இருக்கின்றனர். ரணில் விக்கிரமசிங்கவைப் போல் இந்த நாட்டை வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எமது அரசு எழுதிவைக்கவில்லை. 2001ஆம் ஆண்டில் நீங்கள் எழுதிக்கொடுத்திருந்தீர்கள். ஆனால், 2015ஆம் ஆண்டுக்குப் பின் எமது படையினருக்கு எதிராகப் போர்க்குற்ற நீதிமன்றத்துக்குச் சென்றீர்கள். படையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் ஐ.நா. தீர்மானங்களுக்கும் இணங்கியிருந்தீர்கள்” – என்றார்