கரையோர தூய்மைப்படுத்தல் தினம்.
இம்மாதம் 19 ம்திகதி தொடக்கம் 25 ம் திகதி வரை கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல் வளங்கள் பாதுகாப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் கிழக்கு மாகாண மற்றும் திருகோணமலை மாவட்ட பிரதான வைபவம் இன்று திருகோணமலை உப்புவெளி கரையோரத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தூய்மைப்படுத்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். மிகவும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக கரையோரம் சார் பிரதேசம் காணப்படுவதாகவும் இதன் அழகு கெடாமல் பாதுகாப்பது அனைவரது பொறுப்பாக அமைவதாக இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
உப்புவெளி கரையோரம் உட்பட 7 கிலோமீற்றர் நீளமான கரையோரம் இதன்போது தூய்மைப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திணைக்கள தலைவர்கள் , சக உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் வட கிழக்கு மாகாண உதவி முகாமையாளர் தி.சிறீபதி தலைமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலகம் என்பன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.