ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச்செயலர் பதவியிலிருந்து அமரவீர, சுமதிபால இராஜிநாமா!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்து அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இராஜிநாமாக் கடித்தைக் கையளித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமையவே இந்த இராஜிநாமாக் கடிதம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவி வகித்த நிலையில் அமைச்சர் மஹிந்த அமரவீர அரசுடன் இணைந்துகொண்டு அமைச்சுப் பதவியையும் பொறுப்பேற்றமை கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரணானது எனத் தெரிவித்து அவரைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கக் கூட்டணியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்தார்.
அதன் பிரகாரம் அமைச்சர் மஹிந்த அமரவீரவை நீக்கியதன் மூலம் வெற்றிடமான பொதுச்செயலாளர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டார்.
இந்தத் தீர்மானத்துக்கு எதிராக மஹிந்த அமரவீர நீதிமன்ற நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், பொதுச்செயலாளர்கள் இரண்டு பேரையும் ஏற்றுக்கொள்வதில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இந்தப் பிரச்சினை காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியாக எந்த நடவடிக்கையும் முன்னெடுத்துச் செல்ல முடியாத சிக்கல் நிலை ஏற்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் பல கட்சிகளுடன் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றைக் கட்டியெழுப்ப தற்போது கலந்துையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பெயரைப் பயன்படுத்தப் பிரேரிக்கப்பட்டிருந்தபோதும் இந்தப் பொதுச்செயலாளர் பதவி பிரச்சினை அதற்குத் தடையாக அமைந்தது.
அதனால் இந்தத் தடையை நீக்கிக்கொள்வதற்காகவே மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகிய இருவருக்கும் இந்தப் பதவியில் இருந்து நீங்கிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.