ஜனாதிபதி ரணிலுடன் தனிப்பட்ட சந்திப்புக்குத் தயாராகும் மொட்டு.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்துவதற்கான கோரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைத்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமது கட்சி இதுவரையில் தீர்மானம் எடுக்காத நிலையில், ஜனாதிபதியுடன் தனிப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின் மூலம் இந்த விடயம் தொடர்பில் ஆழமாகக் கலந்துரையாட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.