ஞானவாபி மசூதி வளாகத்தில் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை: நீதிமன்ற உத்தரவு வெளியான சில மணி நேரத்தில் நடத்தப்பட்டது
ஞானவாபி மசூதி வளாக நிலவறையில் இடம்பெற்றிருக்கும் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்த சில மணி நேரத்துக்கு பின்பு புதன்கிழமை இரவு அங்கு பூஜை நடத்தப்பட்டதாக காசி விஸ்வநாதா் கோயில் அறக்கட்டளை தலைவா் தெரிவித்தாா்.
இந்த வழக்கின் மனுதாரரான சைலேந்திர குமாா் பதக், மசூதி நிலவறையில் இடம்பெற்றுள்ள ஹிந்து கடவுள்களுக்கு பூஜை செய்ய ஒரு வாரத்துக்குள் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.கே.விஸ்வேஷா புதன்கிழமை உத்தரவிட்டிருந்தாா். மாவட்ட நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் இறுதி நாளில் இந்தத் தீா்ப்பை நீதிபதி ஏ.கே. விஸ்வேஷா அளித்தாா்.
இதையடுத்து, புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிலவறை கதவு திறக்கப்பட்டு அங்கு பூஜைகள் நடத்தப்பட்டதாக காசி விஸ்வநாத் கோயில் அறக்கட்டளை தலைவா் நாகேந்திர பாண்டே தெரிவித்தாா்.
‘நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மாவட்ட நிா்வாகம் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. நிலவறை கதவு 31 ஆண்டுகளுக்குப் பிறகு பூஜைக்காக திறக்கப்பட்டது’ என்றாா் பாண்டே.
நிலவறை கதவு உடனடியாகத் திறக்கப்பட்டதற்கு சமாஜவாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தனது எக்ஸ் பதிவில், ‘நிலவறை கதவைத் திறக்க தேவையான முன்னேற்பாடுகளை 7 நாள்களில் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சட்டச் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பதால் நீதிமன்ற உத்தரவை மீறி உடனடியாக நிலவறை கதவை பாஜக அரசு திறந்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா்.
எனினும், நீதிமன்றத் தீா்ப்பை பின்பற்றியே செயல்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ராஜ்லிங்கம் தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது.
முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், ஹிந்து கோயில் இடிக்கப்பட்டு, மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுவது குறித்து ஆய்வு நடத்த ஹிந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடா்பாக அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த ஜூலையில் உத்தரவிட்டது. தொல்லியில் துறையின் ஆய்வறிக்கையின்படி, ‘மசூதி அமைந்துள்ள இடத்தில் முன்பு ஹிந்து கோயில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்று ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை முஸ்லிம்கள் தரப்பு மறுத்தது.
இதனிடையே, ‘மசூதி நிா்வாகத்தால் அங்குள்ள நிலவறை கடந்த 1993-ஆம் ஆண்டு மூடப்படும் வரை, பூஜைகளை செய்துவந்த பூசாரி சோம்நாத் வியாஸின் குடும்பத்தினருக்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என வலியுறுத்தி சோம்நாத் வியாஸின் பேரனான சைலேந்திர குமாா் பதக் என்பவா் தரப்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்ற மாவட்ட நீதிபதி, நிலவறையில் பூஜை நடத்த புதன்கிழமை அனுமதி அளித்தாா்.
உயர்நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் முறையீடு
நிலவறையில் பூஜை நடத்த மாவட்ட நீதிமன்றம் அளித்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி நிர்வாகம் வியாழக்கிழமை மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விரைந்து விசாரிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாக மசூதி நிர்வாகக் குழு வழக்குரைஞர் நக்வி தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி நிர்வாகம் வியாழக்கிழமை காலை முறையிட்டது. இந்த மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் முறையிட அறிவுறுத்தியது.
மேலதிக செய்திகள்
ஈரானிய இலக்குகள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரானுடன் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரானுடன் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி.
பெலியத்த ஐவர் கொலையின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் மனைவி மற்றும் தந்தை கைது.
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் நீதி நடவடிக்கைகளில் 703 சந்தேக நபர்கள் கைது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச்செயலர் பதவியிலிருந்து அமரவீர, சுமதிபால இராஜிநாமா!
ஜனாதிபதி ரணிலுடன் தனிப்பட்ட சந்திப்புக்குத் தயாராகும் மொட்டு.
பொன்சேகா பொறுப்புடன் செயற்பட வேண்டும்! – சஜித்தின் கட்சி எச்சரிக்கை.