முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலக பண்பாட்டுப் பெருவிழா.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலக பண்பாட்டுப் பெருவிழா – 2020
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா 2020 நிகழ்வானது நேற்று(22) செவ்வாய்க்கிழமை மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மு.ப 09.30மணிக்கு பிரதேச செயலாளரும் கலாச்சார பேரவையின் தலைவருமான ரஞ்சனா நவரத்தினம் அவர்களின் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரியங்களை பறைசாற்றும் கலாச்சார பண்பாட்டு பெரு விழாவானது மயிலாட்டம், கோலாட்டம், கும்மி, காவடி உள்ளிட்ட பல்வேறு கலை அம்சங்கள் தாங்கிய பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமானது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தழிழர் தம் பண்பாடுகளை வெளிப்படுத்தும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி நூல் வெளியீடு, மனநோயாளி குறும்பட வெளியீடு மற்றும் 2020 பிரதேச மட்டக் கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா போன்றன சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மதத்தலைவர்கள், கிராம மக்கள், கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

