விஜய் மனதை மாற்றிய `அந்த’ 3 ரகசியங்களும், 2 டார்கெட்களும்..! – விஜய்க்கு காத்திருக்கிறது சவால்கள்
`த.வெ.க உருவாக்கத்துக்குப் பின்பும், எங்க விஜய் இந்த முடிவை அறிவிப்பதற்கு பின்பும், நிறைய ரகசியங்கள் இருக்குங்க நண்பா’ என்றபடியே அடுக்கத் தொடங்கினார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.
‘தமிழக வெற்றி கழகம்’ என தமது புதிய அரசியல் கட்சியைப் பதிவுசெய்துள்ளார் நடிகர் விஜய். முதற்கட்டமாக செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட சிலரை அறிமுகம் செய்துள்ளார், பொதுச்செயலாளர் ஆனந்த். “பிப்., 3-ம் தேதி, பேரறிஞர் அண்ணா நினைவுநாளுக்கு திராவிடக் கட்சிகள் திட்டமிட்டுக்கொண்டிருந்த நேரத்தில்தான், அவர்களுக்கு ஒருநாள் முன்பாகவே, நாங்கள் கட்சியை அறிவித்திருக்கிறோம்” என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
`த.வெ.க உருவாக்கத்துக்குப் பின்பும், எங்க விஜய் இந்த முடிவை அறிவிப்பதற்கு பின்பும், நிறைய ரகசியங்கள் இருக்குங்க நண்பா’ என்றபடியே அடுக்கத் தொடங்கினார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.
உருவான தமிழக வெற்றி கழகம்…
விஜய்-ன் மனதை மாற்றிய 3 ரகசியங்கள்!
“இன்றைய லியோ-வில் இருந்து அன்றைய நாளைய தீர்ப்பு வரை, அவரின் பெரும்பாலான படங்களில் அநீதிக்கு எதிரான நாயகனாக குரல் கொடுப்பார். சின்ன வயதில் இருந்தே இயல்பாகவே இருந்த குணம் அது. அப்பாவின் படங்களும், குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் படங்களை அருகில் இருந்து பார்த்ததும், அவரோடு இணைந்து நடித்ததும் இந்த உணர்வை மேலும் கூர்மையாக்கியது. நட்சத்திர நாயகராக உருவான பிறகு , ‘தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து’, `அகதியான மக்களுக்கு… அமைதியான நாடு கேட்பேன்’ என அரசியல் பேச வைத்தது. ஆனாலும் தேர்தல் அரசியலில் கால் பதிக்கலாமா, வேண்டாமா என்ற யோசனை இருந்தது. அந்த ஊசலாட்டத்தை ஜல்லிக்கட்டுக்கான மெரினா புரட்சி உடைத்தது. அங்கே கர்சீஃப் கட்டிக்கொண்டு, மக்களோடு ஒருவராக நின்றதிலிருந்து அனிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, இன்று சௌத்தில் வந்த வெள்ளம் வரை மக்களை நேரடியாகச் சந்திக்க வைத்தது.
இரண்டாவது, காவலன் தொடங்கி தலைவா, கத்தி, மெர்சல், சர்கார் என தமது படங்கள் சந்தித்த அரசியல் பிரச்னைகள். தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என பாகுபாடு இல்லாமல் பிரச்னை செய்தார்கள்.
மூன்றாவது, தொடக்கத்தில் இருந்தே அரசியலுக்கு வரவேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தினர் கொடுத்த அழுத்தம். முக்கியமாக கலைஞர் மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா என இரண்டு ஆளுமைகள் இல்லாத இந்த நேரத்தில், அந்த வெற்றிடத்தைப் பூர்த்தி செய்ய நம்மால் முடியும் என ஆர்வத்தை வெளிப்படுத்தினர். அட்லாஸ்ட் இவையெல்லாம் சேர்ந்து இன்றைக்கு தமிழக வெற்றி கழகமாக எங்கள் விஜய்யை அரசியல் களத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது” என பின்னணிகளை அடுக்கினர் தென் மண்டலத்து விஜய் மக்கள் இயக்கத்தினர்.
தமிழக வெற்றி கழகம்… பெயரும், பின்னுள்ள 5 காரணங்களும்!
“ஐந்து பெயர்களை உருவாக்கி, அதிலிருந்து த.வெ.க-வைத் தேர்வு செய்தனர். ‘முன்னேற்றம்’ என கட்சி பெயர் வந்தால், மக்களுக்கு பழக்கமானதாக இருக்கும் எனக் கருதினோம். ஆனால், அதுதான் இன்னொரு பக்கம் பழையதுபோல உணர்வைக் கொடுத்துவிடுமோ என்று யோசித்து… அதை ரிஜெக்ட் செய்துவிட்டது தலைமை. `திராவிட’ அல்லது `தேசிய’ என்று இருப்பதற்கு மாறாக தமிழ்நாட்டு மாநிலத்தின் நலனை மைய்யமிட்டதாக இருக்க வேண்டும், அதாவது தமிழ் தேசிய அரசியல் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று பெயரில் ‘தமிழகம்’ சேர்க்கப்பட்டது. ‘கட்சியா…கழகமா…?’ என விவாதம் எழுந்தபோது, ‘கழகம்’ என்பதுதான் வேண்டும் என விஜய் சாரே சொல்லிவிட்டார்.
‘தளபதி விஜய்’ எனக் கட்சி பெயர் இருக்க வேண்டும் என நிர்வாகிகள் ஆசைப்பட்டோம். ஆனால் `தந்தை பெரியார், காமராஜர், அண்ணா என இறந்தவர்கள் பெயரில்தான் ஏனைய கட்சிகள் இருக்கு’ என சென்ட்டிமென்ட்டாக மறுத்துவிட்டது தலைமை. ‘பாசிட்டிவாக கட்சி பெயர் இருக்க வேண்டும்’ என விஜய் சார் விரும்பியபோது, ‘வெற்றி’ என சொன்ன உடனே ‘சூப்பர் இது ஓகே’ என டிக் அடித்தார்” எனக் கட்சி பெயர் ரகசியத்தைப் பட்டியலிட்டார்கள் மேற்கு மண்டல விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.
புதிய கட்சியை அறிவித்த விஜய்…
காரணம், டெல்லி தரும் அழுத்தங்ளா?!
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அடியெடுத்து வைக்கிறோம் என விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அப்படியிருக்க இரண்டாண்டுகளுக்கு முன்பே கட்சி தொடங்க காரணமென்ன? என கேள்வி வருகிறது. “மூன்றாவது முறையாகவும் பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது என பல சர்வேக்கள் வருகிறது. அப்படி வென்றால் தனிப்பெரும் அசைக்க முடியாத சக்தியாக வரும்போது, புதிதாக மாநில அரசியல் பேசும் கட்சிகளை தொடங்க நெருக்கடிகள் வரலாம் என முந்தைய மீட்டிங்கில் சில வெல்விஷர்ஸ் கருத்து தெரிவித்தார்கள். அதனால்தான், அதைத் தவிர்க்க, தற்போது அவசர, அவசரமாக கட்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது” என்கிறார்கள், சென்னை மண்டல வி.ம.இ நிர்வாகிகள்.
மோடியா…ஸ்டாலினா…
யாரை டார்கெட் செய்கிறார் விஜய்?
“கடந்த சில மீட்டிங்குகளில் பெரும் விவாதமே நடந்தது. அதாவது ‘நாடாளுமன்றத் தேர்தலில் நாம வெயிட் காட்டணும்’ என சில நிர்வாகிகள் தெரிவித்தபோது, ‘ஒரு பேச்சுக்கு, நாம வெற்றி அடைந்தாலும், அது போதாது. இது பிரதமரை தேர்வு செய்ற தேர்தல். நம் இலக்கு தமிழ்நாடாக இருப்பதுதான் சரி’ என தலைமை நிர்வாகிகள் சொன்னார்கள். அதை விஜய் சார் ஏற்றுக்கொண்டார். அந்த வகையில்தான் 2026-ஐ இலக்காக்கியுள்ளோம்” என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் கிழக்கு மண்டலத்தினர்.
“தம்முடைய அறிக்கையில் ஊழல் நிர்வாக சீர்கேடுகள், சாதி, மத பிளவுகள் செய்யும் அரசியல் கலாசாரம் என இரண்டை முக்கியமாக குறிப்பிட்டுள்ளார் விஜய். ஓப்பனாக சொல்லவில்லை என்றாலும், முன்னது தி.மு.க-வையும், பின்னது பா.ஜ.க-வையும் குறிப்பிடுவதாக புரிந்துகொள்ளலாம். அந்தவகையில் சென்ட்ரல், ஸ்டேட் இரண்டையுமே டார்கெட் செய்கிறார் விஜய். உண்மையில், ஸ்டாலினை விட உதயநிதிக்குத்தான் கடினமானப் போராக இருக்கும். 2026-ஐ மைய்யப்படுத்திதானே உதயநிதியின் நகர்வுகள் உள்ளது” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தமிழக வெற்றி கழகம்… அடுத்த இரட்டை சீக்ரெட் மூவ்!
“தலைவர் என்ற பதவியை, செயலாளர் என மாற்ற திட்டமிட்டுள்ளனர். விடுபட்ட அணிகள் எல்லாவற்றிலும் பொறுப்புகளை நியமிக்க உள்ளனர். சில மாதங்களில் மதுரை, சேலம், விழுப்புரம் இந்த மூன்றில் ஏதாவது ஒரு நகரத்தில் பிரமாண்ட மாநாட்டை நடத்த உள்ளோம்.
இரண்டாவது, மாநாட்டுக்குப் பிறகு தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகளைக் கையில் எடுத்து, மாநிலம் முழுக்கப் போராட்டங்களை முன்னெடுக்கப் போகிறோம் என சில விஷயங்களை `டாப் லெவல்’ நிர்வாகிகள் பேசி வருகிறார்கள். நிச்சயம் பெரும் மாற்றத்தை நிகழ்த்துவோம்” என உற்சாகமாகப் பகிர்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.
அரசியல் என்பது ஐஞ்சு ஃபைட்டு, நாலு பாட்டு, அரசியல் வசனங்கள் மூலமாக மட்டுமே வென்றுவிடக்கூடிய கமர்ஷியல் படமல்ல… அது நீண்ட நெடிய போர்ப் பயணம்… மக்களுக்காக பிரதிபலன் பார்க்காமல் உழைத்தவர்களை மட்டுமே, நிரந்தர சிம்மாசனத்தில் அமரவைத்துள்ளனர் வாக்காள பெருமக்கள்… விஜய்-க்கு காத்திருக்கிறது சவால்கள்!
சே.த.இளங்கோவன்
More News
மின்சார விநியோகம் மற்றும் பெற்றோலியப் பொருட்கள் விசேட வர்த்தமானி அறிவித்தல்.
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 770 குற்றவாளிகள் கைது.
தாய்லாந்து பிரதமர் இலங்கை வந்தடைந்துள்ளார்.
நாளை பல இடங்களில் ரயில்கள் நிற்காமல் இயக்கப்படும்.
டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் இலங்கை 212 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கெஹலியவுக்கு விளக்கமறியல்!
மகாராஷ்டிர மருத்துவமனைகளில் போலி மருந்துகள்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்
கோட்டா நீட் மாணவர் தற்கொலை: விடுதிக்கு சீல்!
ரூ. 29-க்கு 1 கிலோ ‘பாரத்’ அரிசி: அடுத்த வாரம் விற்பனை
சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மற்றொரு படகை மீட்ட இந்திய கடற்படை!
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கினார் : ‘தமிழக வெற்றி கழகம்’