பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்தியத் தூதரகப் பணியாளர் கைது
புதுடெல்லி: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உளவுபார்த்ததாகக் கூறி, இந்திய வெளியுறவு அமைச்சு ஊழியர் ஒருவரை உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது.
சத்யேந்திர சிவால் என்ற அந்த ஆடவர், இந்தியத் தூதரகம், தற்காப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு, இந்திய ராணுவ அமைப்புகள் குறித்த ரகசியத் தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிர்ந்துகொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
“சத்யேந்திரா ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதுரகத்தில் பணியமர்த்தப்பட்டு இருந்தார். அவர் உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டம், ஷாமகியுதீன்பூர் எனும் சிற்றூரைச் சேர்ந்தவர்,” என்று உ.பி. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு ஓர் அறிக்கை மூலமாக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) தெரிவித்தது.
மீரட் நகரில் சத்யேந்திரா கைதுசெய்யப்பட்டார். விசாரணையின்போது ஐஎஸ்ஐக்காக வேலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அவரிடமிருந்து இரண்டு கைப்பேசிகளும் பல அடையாள ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
சத்யேந்திரா கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து மாஸ்கோவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பு உதவியாளராகப் பணியாற்றி வந்தார். அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.