அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோத பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில், அமைச்சா் வி.செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவா் வைக்கப்பட்டுள்ளாா்.
19-ஆவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு
இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் புதன்கிழமையுடன் முடிவடைவதால், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக அமைச்சா் செந்தில் பாலாஜி ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப். 15-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதன்மூலம் 19-ஆவது முறையாக செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்த கேரளம் மாநில பதிவெண் கொண்ட கார்.
இந்த நிலையில், கரூர், ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சா் செந்தில் பாலாஜி வீட்டிற்கு வியாழக்கிழமை அதிகாலை வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கேரளம் மாநில பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்களில் வந்த 5 -க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும் போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது அல்லது உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம். ஆனால், பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படை வீரர்கள் இல்லாமல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலதிக செய்திகள்
சீனாவுக்கு ஐ.நா பொதுச்செயலாளரின் வாழ்த்துகள்.
காணாமல் போன அமெரிக்க ஹெலிகாப்டர்.
நெதன்யாகு ஹமாஸ் நிபந்தனைகளை தூக்கி எறிந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பீல்ட் மாரஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு.
ஜனாதிபதி அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.