மலையக மக்கள் முன்னணியின் மாநாட்டை ஏப்ரல் 26, 27 ஆம் திகதிகளில் நடத்தத் திட்டம்.
மலையக மக்கள் முன்னணியின் தேசிய மாநாடும் 35 ஆண்டு நிறைவு விழாவும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26, 27 ஆம் திகதிகளில் நுவரெலியாவில் அல்லது ஹட்டனில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பான கட்சியின் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று அண்மையில் இடம்பெற்றது என்றும், இதன்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மலையக மக்கள் முன்னணி 1989 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மறைந்த தலைவர் பெரியசாமி சந்திரசேகரனால் ஸ்தாபிக்கப்பட்டது.
மலையகத் தேசியம் மற்றும் உரிமை அரசியலுக்காக ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியை ஆரம்பத்திலேயே ஓரம் கட்டிவிட வேண்டும் எனப் பலரும் செயற்பட்டு வந்த நிலையில் தனது விடாமுயற்சியின் பயனாகவும் அன்று அவருடன் இணைந்திருந்த இளைஞர்களின் துடிப்பான செயற்பாடுகளாலும் மலையகத்தின் ஒரு மாற்றுக் கட்சியாக உருவெடுத்தது.
யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்த மலையக மக்கள் முன்னணி இலங்கை அரசியல் வரலாற்றில் 1994 ஆம் ஆண்டு ஓர் அரசைத் தீர்மானிக்கின்ற சக்தியாக அது தன்னை அரசியலில் வளர்த்துக்கொண்டது.
“நான் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்பு அமரர் சந்திரசேகரனின் வழியில் இந்தக் கட்சிக்கு தலைமை தாங்கி பல வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. எனவே, மலையக மக்கள் முன்னணிக்கென ஒரு சரித்திரம் இருக்கின்றது. கடந்த பல வருடங்களாக மாநாட்டை நடத்த முடியாத நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மாநட்டை மிகவும் சிறப்பாக முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.” – என்று இராதாகிருஷ்ணன் எம்.பி. குறிப்பிட்டார்.
மேலும், இந்த மாநட்டில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் இருந்தும் முக்கியஸ்தர்கள் பங்கெடுக்கவுள்ளனர். குறிப்பாக இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து மேடைப் பேச்சாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதன்போது மலையக மக்கள் முன்னணிக்காகவும் அதன் முன்னேற்றத்துக்காகவும் செயற்பட்டவர்கள் அத்துடன் மலையகத்துக்குப் பெருமை சேர்த்தவர்கள் எனப் பலரும் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த மாநாடானது மலையக மக்கள் முன்னணியின் ஒரு மைகல்லாக அமையும் என்றும் இராதாகிருஷ்ணன் எம்.பி. மேலும் கூறினார்.