ஜகத் பிரியங்கர எம்.பியாகப் பதவிப் பிரமாணம்!
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினராக ஜகத் பிரியங்கர இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்திய புத்தளம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஜகத் பிரியங்கர இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
1979 இல் பிறந்த ஜகத் பிரியங்கர திக்வல்லை அரச பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இரண்டாம் நிலைக் கல்வியை வென்னப்புவ ஜோசப் வாஸ் மத்திய கல்லூரியிலும் நிறைவு செய்துள்ளார். அவர் களனிப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியுமாவார்.
2015 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ஜகத் பிரியங்கர 31 ஆயிரத்து 424 விருப்பு வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் ஐந்தாவதாகத் தெரிவானார்.
மீண்டும் 2017 இல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட அவர் அதில் உள்ளூராட்சி சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அவர் 2020 இல் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு 40 ஆயிரத்து 724 வாக்குகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில் ஆறாவதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
சமுர்த்தி முகாமையாளரான ஜகத் பிரியங்கர, சமுர்த்தி தேசிய அமைப்பு மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளருமாவார். இவர் தினமின, லங்காதீப மற்றும் மவ்பிம ஆகிய பத்திரிகைகளில் ஊடகவியலாளராகவும், சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளராகவும் செயற்பட்ட மறைந்த எல்.கே. சாம்சன் ஜயந்தவின் புதல்வராவார்.
2007 இல் எம்.வீ. தேதுனுவை மணந்த ஜகத் பிரியங்கர மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.