சாப்பாடு தராத தாயை கொலை செய்த சிறுவன்.. வழக்கில் திடீர் திருப்பம்!
கர்நாடக மாநில பெற்ற தாயை உணவு தரவில்லை எனக் கூறி அடித்துக் கொன்று விட்டதாக மகன் காவல்நிலையத்தில் சரணடைந்த வழக்கில் புதிய திருப்பமாக, சிறுவனின் தந்தை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர். புரா பகுதியில் சந்திரப்பா, நேத்ரா ஆகிய தம்பதி கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு கல்லூரியில் டிப்ளமோ பயின்று வரும் மகன் ஒருவர் உள்ளார். இவர்களுக்கு சொந்த ஊர் முலபாகிலு என்பதால் அங்கு வீடு கட்டி வருகின்றனர். கட்டுமானப் பணிகளை பார்வையிட தந்தை சந்திரப்பா அங்கு சென்று விட்டார். மகன், தாயுடன் ஆர்.கே. புரா பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி கல்லூரி செல்லும் போது உணவு சமைத்து வைக்கவில்லை எனக் கூறி தாய் நேத்ராவை இரும்புக் கம்பியால் அடித்து கொன்று விட்டதாக மகன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்த போது, தாய் நேத்ரா ஆத்திரத்தில் நீ என் மகனே இல்லை எனக் கூறியதால் ஆத்திரத்தில் அடித்துக் கொன்று விட்டதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பியை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் ஆய்வறிக்கையில் கிடைத்த தகவல்கள் இந்த வழக்கில் பல புதிய திருப்பங்களைக் கொண்டு வந்தது.
நேத்ராவை அடித்துக் கொன்ற இரும்புக்கம்பியில் இரண்டு பேரின், கைரேகைகள் இருப்பதாக அறிக்கை மூலம் தெரியவந்தது. உடனே போலீசாரின் சந்தேகம் நேத்ராவின் கணவர் சந்திரப்பா மீது திரும்பியது. சந்திரப்பாவை பிடித்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.
நேத்ராவதிக்கு வேறொரு நபருடன் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதை தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த நேத்ரா சந்திரப்பாவை ஆபாசமாக பேசி சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வீட்டில் சரியாக உணவு சமைக்காமல் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் தெரிகிறது.
கடந்த இரண்டாம் தேதி ஏற்பட்ட தகராறில், நேத்ராவை, சந்திரப்பா இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். வெளியே அமர்ந்து படித்து கொண்டிருந்த மகனிடம், தாயை கொன்று விட்டதாக சந்திரப்பா கூறியுள்ளார். உடனே இந்த கொலை பழியை தான் ஏற்று கொள்வதாகவும், தான் மைனர் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தான் அடைப்பார்கள் என்றும் மகன் கூறியுள்ளார்.
நன்னடத்தை அடிப்படையில் விரைவில் தன்னை விடுவித்து விடுவார்கள், அதற்குள் தனக்காக நிறைய சம்பாதித்து வைக்குமாறும் கூறியுள்ளார். மேலும் கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பியை எடுத்து மீண்டும் நேத்திரவை தாக்கி விட்டு, காவல்நிலையத்தில் சரணடைந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தற்போது சந்திரப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர். தந்தை செய்த கொலைக்கு மகன் பொறுப்பேற்றுக் கொண்டு காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக செய்திகள்
உக்ரைன் ராணுவ தளபதி பதவி நீக்கம்.
இம்ரான் தபால் மூலம் வாக்களித்தார், மனைவி வாக்கு இழந்தார்.
ஹமாஸின் போர்நிறுத்த முன்மொழிவுகளை நெதன்யாகு நிராகரித்தார்.
ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை அதிகரிப்பு.