வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் சென்னை காவல்துறை!
சென்னையில் தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.
சென்னை அண்ணா நகா் டிவிஎஸ் அவென்யூவில் உள்ள ஒரு தனியாா் பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ‘எச்சரிக்கை’ என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் அந்த பள்ளியில் இரு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பள்ளி நிா்வாகிகள் உடனே, சென்னை பெருநகர காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் காவல் துறை உயா் அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்பு பிரிவினா், மோப்ப நாய் பிரிவு ஆகியோா் விரைந்துச் சென்று சோதனை நடத்தினா்.
இதற்கிடையே முகப்போ், அண்ணா நகா், திருமழிசை, பெரம்பூா், எழும்பூா், சாந்தோம், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், கீழ்ப்பாக்கம், கே.கே.நகா், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் உள்ள சில தனியாா் பள்ளிகளுக்கும் அதே மின்னஞ்சல் அடுத்தடுத்து சென்றது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனா்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். அதில் அந்தப் பள்ளிகளில் சந்தேகத்துக்குரிய வகையில் எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. புரளி ஏற்படுத்தும் நோக்கில் மிரட்டல் மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி நிா்வாகங்கள் தரப்பில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தகவல் தொழில்நுட் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், சென்னையில் தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.
மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தவர் ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியாததால் இன்டர்போல் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் கைது செய்வோம்
இதனிடையே,பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை விரைவில் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 4 பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளடக்கிய சாலைப்பாதுகாப்புக் குழு வெள்ளிக்கிழமை சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக தொடர் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அது குறித்த விவரங்களை தற்போது வெளியிட முடியாது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
உக்ரைன் ராணுவ தளபதி பதவி நீக்கம்.
இம்ரான் தபால் மூலம் வாக்களித்தார், மனைவி வாக்கு இழந்தார்.
ஹமாஸின் போர்நிறுத்த முன்மொழிவுகளை நெதன்யாகு நிராகரித்தார்.
ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை அதிகரிப்பு.
சாப்பாடு தராத தாயை கொலை செய்த சிறுவன்.. வழக்கில் திடீர் திருப்பம்!