இடதுசாரி ஆட்சி நடைபெறும் கேரளாவுக்கும் அநுர விஜயம்.
இந்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கலந்துகொள்கின்ற இந்திய விஜயத்தின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் இன்றாகும்.
இந்தியாவின் கமியூனிஸ்ட் கட்சியை முதன்மையாகக்கொண்ட இடதுசாரிக் கூட்டமைப்பால் அதிகாரம் வகிக்கப்படுகின்ற கேரளா மாநிலத்திலேயே இன்று அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள்.
மூன்று கோடியே ஐம்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட கேரளா மாநிலம் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் வேகமான முன்னேற்றமடைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதியுயர் இடத்தை கேரளா உரித்தாக்கிக் கொண்டுள்ளது.
இன்று முற்பகல் வேளையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழு கேரளா தலைநகரமான திருவனந்தபுரத்தில் மாநில அரசின் கைத்தொழில்கள் மற்றும் சட்டம் பற்றிய அமைச்சர் பி.ரஜீவ்வைச் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.
பி.ரஜீவ் இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு அங்கத்தவராக விளங்குவதோடு கட்சியின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரைப் போன்றே ஒரு சட்டத்துறை பட்டதாரியுமாவார்.
அதனையடுத்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் அவதானிப்புச் சுற்றுப் பயணத்தில் பங்கேற்றனர். அந்த நிறுவனத்தின் பணிப்பாளருடன் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டதோடு இந்திய விண்வெளி நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும் தகவல்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் பிரதானமான விண்வெளி ஆராய்ச்சி நிலையமாக அமைவதோடு அது இந்தியாவின் செய்மதி நிகழ்ச்சித்திட்டத்திற்கு அவசியமான ரொக்கெட்டுகளையும் விண்வெளிக் கலங்களையும் உற்பத்திசெய்து வருகின்றது. அதேவேளையில் தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழுவினர் அதன் கட்டுப்பாட்டு நிலையத்தையும் விண்வெளி அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிடுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொண்டனர்.
அதன் பின்னர் மேற்படி குழுவினர் இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்ற முதலாவதும் மிகப்பெரியதுமான தகவல் தொழில்நுட்ப பூங்காக்களிலொன்றான திருவனந்தபுரத்தின் Technopark இலும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டனர். அதன் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தருடன் நிறுவனம் சம்பந்தமான விசேட தகவல்கள் பற்றியும் கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டனர்.
இந்த Technopark 1990 இல் கேரளா மாநில முதலமைச்சர் ஈ. கே. நாயனாரின் ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அது 800 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பினைக் கொண்டுள்ளதோடு கட்டடத்தின் பரப்பளவு 10.6 மில்லியன் என குறிப்பிடப்படுகின்றது. அதற்குள் 480 கம்பெனிகள் இயங்கிவருவதோடு 70 ஆயிரம் பேருக்கு மேற்பட்ட தொழில்வாண்மையாளர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். இது கேரளை மாநில ஆட்சியின் கீழேயே நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.